//]]>

Monday, December 4, 2017

பிரபல தமிழ் இணையத்தளச் செய்திச் சேவையின் முகாமையாளரால் யாழ். ஊடகவியலாளருக்கு கடும் அச்சுறுத்தல்: நடந்தது என்ன?


யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரொருவருக்கு இலங்கையின் பிரபல இணையத்தளச் செய்திச் சேவையொன்றின் முகாமையாளரால்  கடும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஊடகவியலாளர்  மேற்படி செய்திச் சேவையின் யாழ். மாவட்டப் பிராந்தியச் செய்தியாளராகவும் கடமையாற்றி வரும் நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(03-12-2017) காலை தொலைபேசியூடாக இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேற்படி ஊடகவியலாளரால் நேற்றுப் பிற்பகல் யாழ். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கடந்த மாதம்-27 ஆம் திகதி முற்பகல் யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியின் முன்பாக யாழ். பல்கலைக்கழகச் சமூகத்தின் ஏற்பாட்டில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் செய்தி சேகரித்து அனுப்புவதாக முன்கூட்டியே கொழும்பிலுள்ள மேற்படி இணையத்தளச் செய்திச் சேவையின் அலுவலகத்திற்கு அறிவித்து விட்டு சுயாதீன ஊடகவியலாளர் செய்தி சேகரிக்கச் சென்றுள்ளார். அன்றைய தினம் பெய்த மழையையும் பொருட்படுத்தாது குறித்த ஊடகவியலாளர் பெரும் சிரமத்தின் மத்தியில் செய்தி சேகரித்து விட்டுச் சுமார் ஏழு கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள தனது வீடு நோக்கி விரைந்துள்ளார்.

வீடு சென்றவுடன் அன்றைய தினம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பதிவு செய்த செய்தியை உடனடியாக அனுப்பியுள்ளதுடன் புகைப்படங்கள், காணொளி என்பவற்றையும் அனுப்பியுள்ளார். குறித்த செய்தியைப் பிரசுரிப்பதாக அலுவலகத்திலுள்ள உப ஆசிரியரான பெண்மணியால் தெரிவிக்கப்பட்ட போதும் குறித்த ஊடகவியலாளரின் செய்தி பிரசுரிக்கப்படவில்லை. அதற்கு மாறாக குறித்த நிகழ்விற்குச் செல்லாத வேறொரு ஊடகவியலாளரின் பெயருடன் செய்தி மற்றும் புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இதனால், நேரடியாகக் களத்திற்குச் சென்று செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் தனது கடும் அதிருப்தியை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு தெரியப்படுத்தியுள்ளார்.

நீங்கள் களத்திற்குச் சென்று செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளருக்கு முக்கியத்துவம் வழங்காதது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல எனக் கூறியுள்ளதுடன், நீங்கள் சாதகமான பதில் வழங்கும் வரை என்னால் செய்திகள் எவையும் அனுப்ப முடியாதெனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த ஊடக நிறுவனத்தைச் சேர்ந்த எவரும் மேற்படி ஊடகவியலாளருடன் மூன்று நாட்களாகத் தொடர்பு கொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த- 30 ஆம் திகதி பாதிக்கப்பட்ட ஊடகவியலாளரால் குறித்த இணையத்தள இயக்குனருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.  அந்தக் கடிதத்திற்கு அவரிடமிருந்து சரியான பதிலெதுவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு மேற்படி நிறுவன இயக்குனருக்கு மீண்டுமொரு கடிதம் குறித்த ஊடகவியலாளரால் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விடயம் சம்பந்தமாக இணையத்தள முகாமையாளருடன் தொடர்பு கொள்ளுமாறு அலுவலகத்திலுள்ளவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த ஊடகவியலாளர் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளாமல் அவரது பிரத்தியேக மெயிலுக்குக் கடிதங்கள் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதங்களில் "பொறுப்பு வாய்ந்த நீங்களே களத்தில் நின்று கஷ்டப்படும் ஒரு ஊடகவியலாளனின் உண்மையான உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாதது மிகவும் வருத்தமளிக்கிறது".நீங்கள் வேண்டுமானால் யாழ்ப்பாணத்திற்கு ஒருவரை அனுப்பி களத்தில் யார் கஸ்டப்படுகிறான் என்று வேண்டுமானால் பார்க்கலாம்!. நீங்கள் களத்தில் நின்று பணியாற்றாத ஒரு ஊடகவியலாளருக்குச் சார்பாகச் செயற்படுவது எந்தவகையிலும் ஏற்கக் கூடியதல்ல. இந்த விடயம் தொடர்பில் என்னால் எந்தவித விட்டுக் கொடுப்பையும் மேற்கொள்ள முடியாது என  ஊடகவியலாளரால் தெளிவாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.



எனினும், குறித்த ஊடகவியலாளருக்கு இணையத்தள முகாமையாளரால் சாதகமான பதிலெதுவும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் மறுநாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை(03) காலை அலுவலகத் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்ட மேற்படி ஊடகவியலாளர் அங்கிருந்த அலுவலரிடம் எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இதுவரை சாதகமான பதிலெதுவும் வழங்கவில்லை. இதனால் நான் மேலதிக நடவடிக்கைகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார். அப்போது இவ்விடயம் சம்பந்தமாக எமது முகாமையாளர் உங்களுடன் தொடர்பு கொள்வாரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றுக் காலை-09.15 மணியளவில் குறித்த ஊடகவியலாளருடன் தொடர்பு கொண்ட மேற்படி செய்தி இணையத்தளத்தின் முகாமையாளர் ஊடகவியலாளரைக் கடுமையாக மிரட்டியுள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் எமது செய்திச் சேவைக்கு விபரிக்கையில்,

தமிழ்வின் இணையத்தளச் செய்திச் சேவையின் முகாமையாளர் இவ்வாறு செயற்படுவார் என நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. நேற்றைய  தினம் காலை-09.15 மணியளவில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர் 'என்ர பவர் என்னவென்று தெரியுமா?' 'உன்னை என்ன செய்வேனென்று தெரியுமா?' என என்னைக் கடுமையாக மிரட்டியதுடன், தகாத வார்த்தைப் பிரயோகங்களையும் மேற்கொண்டுள்ளார்.

நான் உங்கள் மீது மரியாதை வைத்திருக்கிறேன்.... நீங்கள் இவ்வாறு செயற்படுவது முறையல்ல எனப் பல தடவைகள் சுட்டிக் காட்டிய போதும் முகாமையாளர் அதனைப் பொருட்படுத்தாதது மிகுந்த கவலையைத் தருகிறது.

என் ஊடக வரலாற்றில் இவ்வாறான மோசமான அனுபவத்தை நான் இதுவரை அனுபவித்ததில்லை எனக் கவலையுடன் தெரிவித்தார்.

இதேவேளை, மேற்படி இணையத்தள செய்திச் சேவையின் முகாமையாளரால் தான் மிரட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்துப் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளரால் நேற்றுப் பிற்பகல் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஊடகவியலாளரின் முறைப்பாட்டுக்கமையை சுன்னாகம் பொலிஸார் இன்றைய தினம்(04)விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

யாழ். குப்பிளானைச் சேர்ந்த செல்வநாயகம் ரவிசாந்(வயது-29) என்ற இளம் ஊடகவியலாளருக்கே இவ்வாறு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி ஊடகவியலாளர் தினகரன் பத்திரிகையின் ஊடகவியலாளராகவும் கடமையாற்றி வருகின்றார் என்பதுடன் இளம் எழுத்தாளர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment