//]]>

Wednesday, December 6, 2017

யாழ். மீசாலையில் கொடூர விபத்து: வயோதிபத் தாய் பலி

யாழ். தென்மராட்சி மீசாலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இன்று புதன்கிழமை(06) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் வயோதிபத் தாயாரொருவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், அவரது கணவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ். சாவகச்சேரியிலிருந்து கொடிகாமம் நோக்கி வயோதிபத் தம்பதிகள் மோட்டார் சைக்கிளில் சென்ற சமயம் வீதியின் ஓரத்தில் நின்ற காரின் சாரதி கார்க் கதவினைத் திடீரெனத் திறந்து பார்த்துள்ளார். இச்சந்தர்ப்பத்தில் குறித்த தம்பதிகள் இருவரும் கார்க் கதவில் மோதி வீதியிலுள்ள நிலத்தில் விழுந்துள்ளனர்.

இதன் போது அவர்களின் பின்புறமாக வேகமாக வந்த டிப்பர் பெண்மணியை மோதித் தள்ளியதாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ். மீசாலை வடக்கைச் சேர்ந்த சந்திரபாலன் பரமேஸ்வரி(வயது-62) என்ற பெண்ணே சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

அவரது கணவரான 67வயதான சின்னையா சந்திரபாலன் தலையில் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சம்பவம் தொடர்பாகச் சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment