//]]>

Friday, December 22, 2017

யாழில் அம்புலன்ஸில் சென்று ஓ.எல் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள்


நடைபெற்று முடிவடைந்த க.பொ. த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய இரு மாணவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போதும் நோயாளர் காவுவண்டியில்(அம்புலன்ஸ்) சென்று பரீட்சை எழுதியுள்ள சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது. யாழ். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இரு மாணவர்களே இவ்வாறு பரீட்சை எழுதியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக   அனுமதிக்கப்பட்டிருந்த மாணவர்களில் ஒருவர் டெங்குக் காய்ச்சலுக்கு இலக்காகியிருந்ததுடன் மற்றைய மாணவர் பாம்புக்கடிக்கும் உள்ளாகியிருந்தார்.

குறித்த மாணவர்கள் இருவரும் யாழ். குப்பிளான் மற்றும் வயாவிளான் பகுதியைச் சேர்ந்த வலிகாமத்தின் பிரபல கல்லூரியொன்றின் மாணவர்களாவார். மேற்படி மாணவர்களில் ஒருவர் சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாகிய சில நாட்களில் டெங்குக் காய்ச்சலுக்கு இலக்காகியிருக்கலாம் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த இரு மாணவர்களும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போதும் பரீட்சை எழுதும் உடல்தகுதி இரு மாணவர்களிடமும் இருந்தது. ஆயினும், மாணவர்கள் இருவரும் இரு தினங்கள் வைத்தியர்களின் கண்காணிப்பில் இருப்பது சிறந்தது என வைத்தியர்கள் கருதினர். எனவே, குறித்த மாணவர்களுக்குத் தொடர்ந்தும் சிகிச்சையளிப்பதென முடிவு செய்யப்பட்டது. 

இதனையடுத்து, மேற்படி இரு மாணவர்களும் நோயாளர் காவுவண்டியில்(அம்புலன்ஸ்) பரீட்சை மண்டபம் பரீட்சை எழுதுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. இணுவிலைச் சேர்ந்த மருத்துவ நிபுணரொருவர் இந்த விடயத்தில் சிறப்புக் கவனம் செலுத்தினார். இரு மாணவர்களும் பரீட்சை எழுதும் வேளையில் தாதிய உத்தியோகத்தரொருவர் பரீட்சை மண்டபத்தில் தங்கியிருந்து குறித்த மாணவர்களின் உடல்நிலைமைகளைக் கண்காணித்தார்.

இந்நிலையில் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்ட போதும் குறித்த மாணவர்கள் இருவரும் தன்னம்பிக்கையுடன் க. பொ.த சாதாரண தரப் பரீட்சையை நிறைவு செய்துள்ளனர். குறித்த விடயம் யாழ். கல்விச் சமூகத்தினர் மத்தியில் தற்போது முக்கிய பேசுபொருளாகியுள்ளது. 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment