//]]>

Friday, December 1, 2017

வலி. வடக்கின் வயாவிளான், பலாலி தெற்குப் பகுதிகள் விடுவிப்பு: ஜனாதிபதியின் செயலாளரால் உறுதிமொழி உறுதிமொழி (Photo)


இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வலிகாமம் வடக்குப் பிரதேசத்தின் வயாவிளான் கிராமத்தின் 29 ஏக்கர் நிலப் பகுதி நேற்று வியாழக்கிழமை(30) விடுவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வயாவிளானின் பெரும்பகுதி இன்னமும் விடுவிக்கப்படாதுள்ளது. 

விடுவிக்கப்படாதுள்ள வயாவிளானின் எஞ்சிய பகுதி மற்றும் பலாலி தெற்கு ஆகிய பகுதிகளை விடுவிக்க வலியுறுத்தி ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோவை கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் வயாவிளான் சமூகநல அமைப்பின் தலைவர் ம. ஜெகநாதன் மற்றும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் இணைந்து நேற்றுச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.  இந்த விசேட சந்திப்பு நேற்றுப் பிற்பகல்-12.30 மணி முதல் 01.30 மணி வரை இடம்பெற்றுள்ளது. 

இந்தச் சந்திப்பின் போது பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சார்பாக ஜனாதிபதியின் செயலாளரிடம்  வயாவிளான் சமூகநல அமைப்பின் தலைவர் ம. ஜெகநாதன்  தெரிவித்ததாவது, 

விமானப் படைக் கட்டளைத் தளபதியை நாம் சந்தித்த போது பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்குள் வயாவிளான் பகுதி உள்ளடங்காது. எனவே, குறித்த பகுதி விடுவிப்புத் தொடர்பில் தமக்கு ஆட்சேபனையில்லை எனத் தெரிவித்திருந்தார். 

கடந்த காலங்களில் யாழ். மாவட்ட இராணுவத் தளபதியாகவிருந்த மகேஷ் சேனநாயக்காவை இரு தடவைகள் நேரடியாகச் சந்தித்து எமது மக்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தியிருந்தோம். இந்த வருட ஒக்ரோபர் மாதத்திற்குள் வயாவிளான் பகுதி விடுவிக்கப்படுமென இதன் போது யாழ். மாவட்ட இராணுவத் தளபதியாகவிருந்த மகேஷ் சேனநாயக்கா தெரிவித்திருந்தார். ஆனால், இதுவரை வயாவிளான் பகுதி விடுவிக்கப்படாத காரணத்தால் எமது மக்கள் மிகவும் அதிருப்தியடைந்துள்ளனர். இதன் காரணமாகவே நாம் உங்களை நேரடியாகச் சந்தித்து எமது கோரிக்கைகளை முன்வைக்க வந்துள்ளோம்.  ஆகவே, வயாவிளான் மற்றும் பலாலி தெற்கு ஆகிய பகுதிகள் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். 

அத்துடன் வயாவிளானின் ஒரு சிறிய பகுதி மாத்திரம் நேற்று(30) விடுவிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் குறித்த பகுதிகள் விடுவிக்கப்படாமையால் பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ள பாதிப்புகளைச் சுட்டிக் காட்டியதுடன் விடுவிக்க நடவடிக்கை  எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். 

இதனையடுத்து உடனடியாகத் இலங்கையின் இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்காவுடன் ஜனாதிபதியின் செயலாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறித்த பகுதிகள் விடுவிப்புத் தொடர்பில் கலந்தாலோசித்தார். இதன் போது வயாவிளானின் ஒருபகுதியை மாத்திரம் விடுவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவர் ஆட்சேபனை வெளியிட்டுள்ளதுடன் ஏனைய பகுதிகளையும்  விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். அதனை ஏற்றுக் கொண்ட இராணுவத்தளபதி குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து பதிலளிப்பதாகத் தெரிவித்துள்ளார். 

இதன் போது பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சார்பாக ஜனாதிபதிக்கான கோரிக்கைகளடங்கிய மகஜரும் ஜனாதிபதியின் செயலாளரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இராணுவத் தளபதி உங்கள் காணிகள் விடுவிப்புத் தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்வாரெனவும், விரைவில் உங்களுக்குச் சாதகமான பதில் கிடைக்குமெனவும் ஜனாதிபதியின் செயலாளரால் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.  

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment