மிக ஒழுக்கமாக வளர்க்கப்பட்டதுடன் மாத்திரமல்லாமல் அவ்வாறே வாழ்ந்தும் காட்டிய எனக்கு எங்கள் கட்சி என் மீது எடுத்த ஒழுக்காற்று நடவடிக்கை எனக்குள் கடும் கசப்பான உணர்வைத் தோற்றுவித்திருந்தது. ஆனாலும், போர்ச் சூழலுக்குள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் நான் வளர்ந்த விதம் மலையே வந்தாலும் எதிர்த்து நிற்கும் ஆற்றலை எனக்குக் கொடுத்திருந்தது. அந்தத் தைரியம் இன்றும் என்னிடமிருக்கிறது எனப்வடமாகாணக் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவுப் பெரியார் அமரர்- வீரசிங்கத்தின் 53 ஆவது நினைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை(05.12.2017) முற்பகல் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் இவ்வாறு கூறியதைத் தொடர்ந்து பல நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்த யாழ். வீரசிங்கம் மண்டபமே பலத்த கைதட்டலால் அதிர்ந்தது.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
அரசியலுக்குள் வரமாட்டேன் என்று கூறி நான் ஒதுங்கிய போது இல்லை அரசியலுக்குள் வா....வா..எனக் கூறி என்னை அரசியலுக்குள் இழுத்து வந்தவர்கள் என் மீது மேற்கொண்ட பல்வேறு நெருக்குவாரங்கள் ஒருகட்டத்தில் என்னை அரசியலிலிருந்து விலகிப் பிள்ளைகளுடன் எங்கேனும் தலைமறைவாக ஓடி விடுவோமா? என எண்ண வைத்தது. மன விரக்திக்குள்ளாக்கியிருந்தது.
அரசியலுக்குள் வர வேண்டும் என்பது என்னுடைய நோக்குமல்ல. இலக்குமல்ல. சாதாரணதொரு குடும்பப் பெண்மணியாக நானொரு அரசாங்க உத்தியோகத்தராகக் கடமையாற்றியிருந்தேன்.
என்னுடைய குடும்பச் சூழல், இறுதி யுத்தத்தில் இராணுவத்தை நம்பிச் சரணடையச் செய்த என் கணவர் தொடர்பாகத் தேடிய போது இலங்கை இராணுவத்தாலும், இராணுவப் புலனாய்வாளர்களாலும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
அந்தத் தடைகள் அனைத்தையும் தாண்டி அரசியல் எனக்கொரு பாதுகாப்பு அரணாக அமையும் என்பதாலும், மக்களின் அங்கீகாரம் பெற்றவளாகப் பொதுவெளியில் பேசும் போது அந்தப் பேச்சு பலரதும் கவனத்தை ஈர்க்கும் என்பதாலும் தான் நான் அரசியலுக்குள் பிரவேசித்தேன்.
நான் என்னுடைய கொள்கையில் மிகத் தெளிவானவளாகவுள்ளேன். யார் தடையாகவிருந்தாலும் நான் என்னுடைய மனச் சாட்சிக்கு விரோதமில்லாமல் என்னுடைய கொள்கையில் நானென்றும் உறுதியாகவிருப்பேன் எனவும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment