//]]>

Wednesday, December 13, 2017

கதாப்பிரசங்கத்தில் ஆறுவயது ஏழாலைச் சிறுவனின் அபார திறமை: ஒரு சிறப்புப் பார்வை (Videos,Photos)

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ். உடுவில் பிரதேச திருவாசகப் பெருவிழா நேற்று முன்தினம் திங்கட்கிழமை(11) முற்பகல்-09.30 மணி முதல் யாழ். மருதனார்மடம் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய மணி மண்டபத்தில் இடம்பெற்றது. 

இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி- தர்ப்பணா சுதர்சன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் உடுவில் பிரதேச செயலக அறநெறிப் பாடசாலை மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.  

இந்த விழாவில் ஏழாலை ஸ்ரீ அபிராமி உபாசகி அறநெறிப் பாடசாலையைச் சேர்ந்த ஆறு வயதேயான கிருபாகரன் டிலக்சன் என்ற சிறுவன் கலந்து  கொண்டு "திருநாவுக்கரசரின் பக்தியும் மகிமையும்" எனும் தலைப்பில்  சுமார்-15 நிமிடங்கள் இடைவிடாது கதாப்பிரசாங்கம் செய்து விழாவில் கலந்து கொண்டிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்தான்.  

குறித்த சிறுவன் நாயன்மார்களில் மூத்தவராகத் திகழ்ந்த திருநாவுக்கரசு நாயனார் சுவாமிகளின் ஆரம்ப காலம் முதல் அவர் தன் வாழ்வில் புரிந்த அற்புதங்கள் பலவற்றையும் குழந்தைத் தமிழில் இனிமையாக எடுத்துக் கூறிய பாங்கு அற்புதமானது. கதாப்பிரசாங்கம்  மேற்கொண்ட போது மேற்படி சிறுவன் வெளிப்படுத்திய உடல் அசைவு மொழியும் அலாதியானது. 

வெளிப்படுத்திய குறித்த சிறுவனின் அபார திறமையால்  சபையே அமைதியானதுடன் அவனது திறமையை விழாவில் கலந்து கொண்டிருந்த சிறுவர் முதல் பெரியோர் வரை கண் இமை மூடாது கண்டு களித்தனர். கதாப்பிரசாங்கம் நிகழ்த்தி முடித்த பின்னர் சபையில் பலத்த கரகோஷ ஒலியும் எழுந்தது.   

அவனது திறமை கண்டு தெய்வமே குழந்தை வடிவில் நேரில் வருகை தந்து கதாப்பிரசாங்கம் செய்கிறதோ என எண்ண வைத்ததாக விழாவில் பங்கேற்ற மூத்தவர்கள் சிலர் கருத்துத் தெரிவித்தனர். 

இந்தச் சிறுவன் கடந்த ஒக்ரோபர் மாதம்-03 ஆம் திகதி கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் இடம்பெற்ற அகில இலங்கை ரீதியில் ஆரம்பப் பிரிவு அறநெறிப் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட  கதாப் பிரசங்கப் போட்டியில் முதலிடம் பெற்றுத் தன் பெற்றோருக்கும், பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளான். 

இதுவரை யாழிலுள்ள ஐந்து ஆலயத் திருவிழாக் காலத்தில் குறித்த சிறுவன் கதாப்பிரசாங்கம் மேற்கொண்டுள்ளதுடன், பேச்சு, நடனம் ஆகிய துறைகளிலும் திறமை மிகுந்தவராகத் திகழ்கிறான்.இந்த வருட நல்லூர் மஹோற்சவப் பெருந்திருவிழாக்  காலத்தில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அறநெறிப் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட கலைநிகழ்வுகளில் பங்குபற்றித் தமது பல்வேறு திறமைகளையும் வெளிப்படுத்தியுள்ளான். 

இதுவரை கதாப்பிரசாங்கம் மற்றும் பேச்சுப் போட்டிகளில் பங்குபற்றி ஐந்து தங்கப் பதக்கங்களையும் பெற்றுள்ளான்.   

இந்தச் சிறுவனின் திறமைகளுக்கு வழிகாட்டியாகவும், ஊக்குவிப்பாகவும் மேற்படி சிறுவனின் நெருங்கிய உறவினரான வலிகாமம் கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி- கோசலை குலபாலசிங்கம்  காணப்படுகிறார். டிலக்சன் மிகுந்த ஞாபகசக்தியுடையவன் எனவும் ஒரு தடவை சொல்லிக் கொடுத்தாலே அதனை அப்படியே இலகுவில் தனக்குள் உள்வாங்கிக் கொள்வதாகவும் திருமதி- கோசலை குலபாலசிங்கம் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.  எதிர்காலத்தில் சிறந்த பேச்சாளராக வர வேண்டுமென்ற ஆர்வம் டிலக்சனுக்கிருப்பதாகவும் எதிர்காலத்தில் எந்தத் துறையில் விருப்பமோ அந்தத் துறையில் அவனை ஈடுபடுத்துவோம் எனவும் அவர் தெரிவித்தார். 

இது தொடர்பில் டிலக்சனின் தந்தையார் கருத்துத் தெரிவிக்கையில், என் மகனின் திறமைகளை நினைக்கும் போது மிகவும் பெருமையாகவிருக்கிறது. அவனது அத்தை முறையான எனது அக்கா ஒரு தாய் தன் பிள்ளைக்கு எவ்வாறு பாடம் புகட்டுவாரோ அதேபோன்று தான் எனது மகனுக்குச் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறார் என்றார். 

பொதுவாக வயதில் மூத்தவர்கள் தான் கதாப்பிரசாங்கத் துறையில் ஈடுபாடு கொண்டிருப்பார்கள். ஆனால், ஆறுவயதேயான இந்தச் சிறுவன் கதாப்பிரசங்கத் துறையில் கொண்டிருக்கும் அதிக ஈடுபாடும், ஆர்வமும் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. 

எழுத்துருவாக்கம் மற்றும் காணொளி :- செல்வநாயகம் ரவிசாந். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment