//]]>

Sunday, January 28, 2018

யாழில் களைகட்டிய பாரதி விழா:துறைசார் பிரமுகர்கள் ஒன்றிணைவு(Videos)


இந்தியாவின் தமிழகத்தின் புகழ் பூத்த சென்னை பாரதியார் சங்கமும், யாழ்ப்பாணம் பாரதி மன்றமும் இணைந்து மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 135 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நடாத்திய 'பாரதி விழா' இன்று  ஞாயிற்றுக்கிழமை(28) காலை- 09.30 மணி முதல் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் விமரிசையாக நடைபெற்றது.

சென்னை பாரதியார் சங்கத் தலைவர் முதுநிலை வழக்கறிஞர் இரா.காந்தி தலைமையில் இடம்பெற்ற இந்த விழாவில் மேல் மாகாண ஆளுநர் கே.சி. லோகேஸ்வரன் முதன்மை விருந்தினராகவும், யாழ். இந்தியத் துணைத்தூதுவர் ஆ.நடராஜன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

விழாவில் சென்னை சரஸ்வதி பரதநாட்டிய வித்தியாலய இயக்குநர் நர்த்தன சிரோண்மணி கிரிஜா முருகன் குழுவினர் வழங்கிய பரத நாட்டிய நிகழ்வு,  பிரபல நடனக் கலைஞர் கலைமாமணி சோபனா ரமேஷ் வழங்கிய பாரதி பாடல்களுக்கான பரத நாட்டிய நிகழ்வு என்பனவும் மேடையேற்றப்பட்டன.

 குறித்த விழாவில் யாழ். பல்கலைக்கழக வாழ்நாட் பேராசிரியர் அ.சண்முகதாஸ் "பாரதியார் விருது" வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மேலும், பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா, ஈழத்தின் மூத்த கவிஞர் சோ.பத்மநாதன், செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் ஆகிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சான்றோர்களும், தமிழ்நாட்டின்  திருச்சியைச் சேர்ந்த பேராசிரியர்- வெ.இராசேந்திரன் மற்றும் பிரான்ஸ் நாட்டைச்  சேர்ந்த சாம் விஜய் ஆகிய சான்றோர்களும் "பாரதி பணிச்செல்வர்" எனும் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
மேற்படி விருதுகள் சில காரணங்களால் தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வருவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பொன்னாடைகள்  அணிவித்துக் கெளரவிக்கப்பட்டனர். எனினும், விருதுகளுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு இதன் போது வெளியிடப்பட்டது. விழாவையொட்டிய சிறப்புரைகளும் நடைபெற்றது.

இந்த  விழாவில் பிரசித்தி பெற்ற பேச்சாளரும், தமிழகப் பேராசிரியருமான உலகநாயகி பழனி, இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன், உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் அறங்காவலர் குழுத் தலைவர் வேல் வேலுப்பிள்ளை உள்ளிட்ட பல்துறைசார் பிரமுகர்கள்,  கலைஞர்கள், தமிழார்வலர்கள்,மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


(செல்வநாயகம் ரவிசாந்-)






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment