//]]>

Wednesday, January 3, 2018

இ.போ.ச தலைமையகத்திலிருந்து இன்று வடக்குக்கு வருகிறது விசேட குழு


இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய தொழிற்சங்க ஊழியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தையடுத்து போக்குவரத்துசபை தலைமைக் காரியாலயத்திலிருந்து விசேட குழுவொன்று வடக்கிற்கு இன்று(03) வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று(03) காலை வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு வருகை தருகின்ற மேற்படி குழவினர் பேருந்து நிலையத்தை பார்வையிடுவதுடன் இந்த விடயத்தில் சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் விசேட பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பழைய பேருந்து நிலையத்தை மூடி புதிய பேருந்து நிலையத்திற்கு அரச மற்றும் தனியார் பேருந்துகள் சென்று அங்கிருந்து சேவைகளை ஆரம்பிக்குமாறு வடக்கு முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில் அதற்கு இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையினர் கடுமையான எதிர்ப்பையும் வெளியிட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து பல தரப்பினர்களையும் இணைத்துக் கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரையில் தொடர்ச்சியான பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை மேற்கொள்ளப் போவதாகத் தெரிவித்து நேற்றுடன் இரண்டு தினங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் பொது மக்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கியிருந்ததுடன் இலங்கை போக்குவரத்துச் சபையினருக்கும் பலத்த நஷ்டங்களும் ஏற்பட்டிருந்தன.

இவ்வாறானதொரு நிலையில் இந்தப் பிரச்சனைக்கு தீர்வைக் காண வேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் தான் நேற்றையதினம் போக்குவரத்துச் சபை தலைமை காரியாலய பிரதிநிதிகளுக்கும் போக்குவரத்தச் சபை சங்கங்களின் இணைந்த தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று கொழும்பில் இடம்பெற்றிருந்தது.

இதன் போது எடுக்கப்பட்ட முடிவிற்கமைய இன்றையதினம் தலைமை அலுவலக பிரதிநிதிகள் குழுவொன்று வடக்கிற்கு இன்று காலை வருகை தரவுள்ளனர்.

இதன் ஆரம்பத்தில் வவுனியா பஸ்நிலையத்தை பார்வையிட்டு உரிய தரப்புக்களைச் சந்தித்து கலந்துரையாடி இதற்கு உரிய தீர்வு ஏற்படுத்தப்படுமென்றும் இணைந்த சங்கங்களின் பிரதிநிதிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment