ஒரு கல்லூரியின் வளர்ச்சிக்கு கல்வி மாத்திரம் கைகொடுக்காது. மாணவர்களின் ஒழுக்கம் மிக மிக முக்கியம். கல்வியோடு சேர்த்து மாணவர்களின் ஒழுக்க நெறிகளும் வளர்க்கப்படும் போது தான் எதிர்காலத்தில் சிறந்த நற்பிரஜைகள் வாழும் சமூகத்தை எங்களால் கட்டியெழுப்ப முடியும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அறிவுரை கூறியுள்ளார்.
யாழ். வயாவிளான் மத்திய கல்லூரியின் வருடாந்தப் பரிசளிப்பு விழாவும், நிறுவுனர் சிலை திறப்பு விழாவும் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(16) காலை கல்லூரியின் ஆ.சி. நடராசா அரங்கில் சிறப்பாக இடம்பெற்ற போது பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இந்தக் கல்லூரியில் சிறந்த ஒழுக்கம் காணப்படுகிறது. ஆகவே, ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் வழங்கிப் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இவ்வாறான கல்லூரிகளில் சேர்க்கும் போக்கு நிலவுகிறது. ஒரு பாடசாலையில் கல்வி எவ்வாறான உயர்நிலைகளைப் பெற்றிருந்தாலும் கூட ஒழுக்கம் காணப்படாத பாடசாலைகள் எவராலும் மதிக்கப்படுவதில்லை. எனவே, மற்றவர்களை மதிக்கின்ற பண்பையும், உயர் நெறிகளையும் கல்வியால் உருவாகும் ஒழுக்கம் மூலம் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
யாழ். மாவட்டத்திலேயே கடந்தகால யுத்தத்தால் மிக மோசமான பாதிப்புக்களையும், வலிகளையும் சுமந்த பிரதேசமாக வலிகாமம் வடக்குப் பிரதேசம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசத்தில் இன்னும் பல நூற்றுக்கணக்கான மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டிய தேவையுள்ளது. நான் கடந்த 1993 ஆம் ஆண்டு தெல்லிப்பழை உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றியிருக்கிறேன். அந்தக் காலகட்டத்தில் தனியே மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மாத்திரமே இயங்கிக் கொண்டிருந்தன. ஏனைய பகுதி மக்கள் அனைவரும் இடம்பெயர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். இந்தக் காலகட்டத்தில் வயாவிளான் மத்திய கல்லூரியும் சேதமடைந்தது.
இந்தக் கல்லூரி அபரிதமான வளர்ச்சியடைந்த காலப் பகுதியில் தான் இடம்பெயர்ந்து செல்ல வேண்டிய நிலையேற்பட்டது. தற்போது இந்தக் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களின் தொகை படிப்படியாக அதிகரித்து வருவதாக அதிபர் பேசும் போது குறிப்பிட்டார். வலிகாமம் வடக்கில் விடுபடாத பகுதிகள் இன்னமும் பலவுள்ளன. எதிர்காலத்தில் குறிப்பிட்ட பிரதேசங்களும் விடுபடும் போது இந்தக் கல்லூரி மீண்டும் பழைய நிலையை அடையுமென நம்புகின்றேன். இந்தக் கல்லூரியின் வளர்ச்சிக்குப் பழைய மாணவர்களும் காத்திரமான பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்.
உண்மையான தலைமைத்துவமும், அர்ப்பணிப்பான ஆசிரிய வளமும் காணப்படும் போது எந்தவொரு கல்லூரியும் எத்தகைய சவால்கள் ஏற்பட்ட போதும் தலைநிமிர்ந்து நிற்கும்.
கடந்த வருடமும் அமைச்சுக்களிலிருந்து எங்களுக்கு குறிப்பிட்டவளவு நிதி கிடைக்கப் பெற்றன. இந்த வருடமும் அமைச்சுக்களின் நிதி கிடைக்கப் பெறுமென எதிர்பார்க்கின்றோம். வலிகாமம் வடக்குப் பிரதேசம் கடந்த கால யுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டமையால் கடந்த வருடமும் நாம் இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலைகளுக்கே முக்கியத்துவம் வழங்கியிருந்தோம். எனவே, இவ்வருடமும் அவ்வாறான நிதி கிடைக்கப் பெறும் பட்சத்தில் இந்தக் கல்லூரியின் பெளதீக வளர்ச்சிக்கு எங்களாலான உதவிகளை வழங்க முடியும்.
நான் உதவி அரசாங்க அதிபராகவிருந்த போது இந்தப் பாடசாலைக்கு வருகை தருவதற்கான சந்தர்ப்பம் கிட்டவில்லை. தற்போது அந்த வாய்ப்புக் கிட்டியுள்ளமையை எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
(செல்வநாயகம் ரவிசாந்-)
0 comments:
Post a Comment