//]]>

Saturday, September 30, 2017

புற்றுநோய், மாரடைப்பு தவிர்க்கும் ரத்த தானம் என்கிற மகா கொடை


நமது உடலில் திரவ வடிவில், எப்போதும் ஓய்வின்றி உடலுக்குள் நகர்ந்துகொண்டே இருக்கும் ஓர் உறுப்பு... ரத்தம். நீர் உயிர்வாழத் தேவையான அடிப்படை ஆகாரம். அதேபோல் ரத்தம் நாம் உடல் இயங்கத் தேவையான அடிப்படை உறுப்பு. அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான ஆக்சிஜனை எடுத்துக் செல்லும் பெரும் பணியை ரத்தம் செய்கிறது. ரத்தம், நம் உடலின் பிக்பாஸ். ரத்தம் இன்றி செயல்படும் உறுப்புகளும் இல்லை; ரத்தம் இல்லாது இருக்கும் உறுப்புகளும் இல்லை.

இன்று தேசிய தன்னார்வ ரத்த கொடையாளர் தினம். ரத்தம் ஒவ்வொரு மனிதனும் உயிர்வாழத் தேவையான ஒன்று. ரத்தம் கொடையாக பெறுபவர்களின் ஆரோக்கியம், பலன்கள் பற்றி பார்த்திருப்போம். ஆனால், ரத்ததானம் செய்பவர்களுக்கு ஏற்படும் உடல் மாற்றம், ஆரோக்கியம் குறித்து இங்கே பார்ப்போம்.

இவ்வாறு ரத்தம் மற்றும் ரத்ததானம் குறித்த விழிப்புஉணர்வு  ஏற்படுத்தும் வகையில், உலக சுகாதார நிறுவனத்தால் ஆண்டுதோறும் ‘தேசிய தன்னார்வ ரத்தகொடையாளர் தினம்’ அக்டோபர் 1-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 'ரத்த தானம் செய்யுங்கள்! இப்போதும்... எப்போதும்!' என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு, ரத்த தானம் செய்வது குறித்த கேம்ப்கள் மற்றும் விழிப்புஉணர்வு  ஊர்வலங்கள், முகாம்கள், கருத்தரங்குகள், கூட்டங்கள் இந்தியா முழுவதும் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டிலும் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டுவருகின்றன.

ரத்ததானத்துக்கு முன்னும்... பின்னும்... பரிசோதனைகள்!

ரத்ததானம் செய்யும்முன்: ரத்ததானம் செய்ய தானாக முன்வருபவர்களின் ரத்தப் பிரிவு, ரத்த அழுத்தத்தின் அளவு, உடலின் வெப்பநிலை மற்றும் ஹீமோகுளோபின் போன்றவை பரிசோதிக்கப்படும்.

ரத்ததானம் செய்தபின்: நாம் கொடையாகக் கொடுத்த ரத்தத்தில் டெங்கு, மலேரியா, டைஃபாய்டு, ஹெப்படைட்டிஸ் பி மற்றும் சி, எச்.ஐ.வி., எய்ட்ஸ் போன்ற பல நோய்கள் உள்ளனவா எனப் பரிசோதிக்கப்படும். பரிசோதனையின் முடிவுகளைப் பொறுத்து அவற்றின் பயன்பாடுகள் மாறும்.

ரத்ததானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்...

ஒருவர் கொடையாகக் வழங்கும் ரத்தத்தை நான்கு ரத்தக்கூறுகளாகப் பிரித்து, நான்கு உயிர்களைக் காப்பாற்ற  பயன்படுத்தப்படுகிறது.
ரத்தத்தை தானம் செய்வதால், பலன் அடைபவர் ரத்தம் பெறுபவர் மட்டும் அல்ல, ரத்தத்தைத் தானம் செய்தவரும்தான்.

* உடலில் உள்ள பயன்பாட்டு ரத்தம் வெளியேற்றப்படுவதால், உடலில் இயற்கையாகப் புதிய ரத்தம் உற்பத்தியாகும்.
* ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள், சிவப்பணுக்களின் அளவை சீராக வைத்திருக்க உதவும்.
* உடலினுள் ரத்த சுழற்சி சீராக இருக்கும். இதய செயல்பாடுகளைச் சீராக்கும். மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பும் குறையும்.
* உடலில் உள்ள ஊட்டச்சத்துகளின் அளவுகளைச் சீராக்கும். குறிப்பாக உடலில் உள்ள இரும்புச்சத்தின் அளவை சமன் செய்யும்.
* புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும்.
* பல்வேறுவிதமான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும்.

ரத்ததானம் செய்பவர்களின் கவனத்துக்கு...

* ரத்ததானம் செய்பவர் 18 முதல் 60 வயது வரை, 45 கிலோவுக்கு மேல் உள்ளவராக இருக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம்.
* மதுப்பழக்கம் உள்ளவர்கள் மது அருந்தி 48 மணி நேரம் கழித்தும், புகைப்பழக்கம் உள்ளவர்கள் புகைபிடித்து மூன்று மணி நேரம் கழித்தும் ரத்த தானம் செய்யலாம்.
* ரத்ததானம் செய்பவர் உடலுக்குத் தேவையான அளவு இரும்புச்சத்து அளிக்கும் உணவை உண்ண வேண்டும். ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடவேண்டும்.
* ரத்தம் கொடுப்பதுக்கு முன்னர் சீரான தூக்கம் அவசியம்.
* ரத்தம் கொடுப்பதுக்கு முன்னர் குறைந்தளவு நீர் அல்லது பழச்சாற்றை அருந்தலாம். ரத்தம் கொடுத்த பின்னர் பழச்சாறு, பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களைச் சாப்பிடலாம்.
* ரத்தம் கொடுக்கும்போது இறுக்கமான உடைகளைத் தவிர்த்து, தளர்வான உடைகளை அணியலாம்.
*  ரத்தம் கொடுத்த பின்னர், அதிக எடை உள்ள பொருள்களைத் தூக்கக்கூடாது. கடுமையான வேலை, உடற்பயிற்சி போன்றவற்றைச் செய்யக் கூடாது. அடுத்த 24 மணிநேரத்துக்கு மது அருந்தக் கூடாது.

யார் ரத்த தானம் செய்யக்கூடாது!

* 18 வயதுக்குக் குறைவாக உள்ளவர்கள், 45 கிலோவுக்கு குறைவாக எடை உள்ளவர்கள், ரத்தத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளவர்கள் ஆகியோர் ரத்த தானம் செய்யக் கூடாது.
* கர்ப்பகாலங்களிலும் மாதவிடாய் காலங்களிலும் பெண்கள் ரத்ததானம் செய்யக்கூடாது. பாலூட்டும் தாய்மார்கள் ரத்தத்தானம் செய்யக் கூடாது.
* தொற்றுநோய் உள்ளவர்கள், மது அருந்தியவர்கள், புகைப் பழக்கம் உள்ளவர்கள் ரத்த தானம் செய்யக்கூடாது.
* எயிட்ஸ், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், வலிப்பு மற்றும் அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள் ரத்ததானம் செய்யக் கூடாது.

 ச.மோகனப்பிரியா-
நன்றி: விகடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment