கந்தரோடை மக்கள் முன்னேற்ற இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் குருதிக் கொடை முகாம் நிகழ்வொன்று இன்று புதன்கிழமை(31) காலை-09 மணி முதல் யாழ். கந்தரோடை கற்பகுனை விநாயகர் ஆலயத்திற்கு அருகில் நடைபெற்றது. முற்றுமுழுதாக இளைஞர்களின் ஏற்பாட்டிலும், பங்களிப்புடனும் இந்தக் குருதிக் கொடை முகாம் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டுள்ளது.
கந்தரோடை மக்கள் முன்னேற்ற இளைஞர் கழகத் தலைவர் ஜே. ஐங்கரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த குருதிக் கொடை முகாமை வடக்கு மாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இந்தக் குருதிக் கொடை முகாமில் கழக உறுப்பினர்கள், கந்தரோடை மற்றும் அதனை அண்டிய பிரதேச இளைஞர்கள் என 28 வரையானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதி தானம் செய்தனர்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி ம. பிரதீபன் தலைமையில் வைத்தியசாலையின் நடமாடும் இரத்த வங்கிப் பிரிவினர் நேரடியாகச் சென்று இரத்தம் பெற்றுக் கொண்டனர்.
சைவப் பெருமக்களின் தைப்பூச நன்னாளான இன்றைய தினம் கந்தரோடை இளைஞர்கள் மேற்கொண்ட உயிர்காக்கும் பணி பலரதும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், ஏனையவர்களுக்கு முன்னுதாரணமான செயற்பாடெனவும் பலரும் பாராட்டியுள்ளனர்.
(செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- செல்வநாயகம் ரவிசாந்-)
0 comments:
Post a Comment