இன்றைய குடும்பப் பின்னணிகள் வெகுவாக மாறி விட்டன. தாய் தந்தை இருவரும் சேர்ந்து உழைக்கின்ற குடும்ப அமைப்பு உருவாகி விட்டது. மாலையில் உழைத்துச் சோர்வடைந்த நிலையில் வீட்டுக்குத் திரும்பும் பெற்றோருக்கு தமது பிள்ளைகளுடன் பேச நேரம் கிடைப்பதில்லை. இன்றைய குழந்தைகளோ தாயின் அன்பிற்காக ஏங்குகின்றார்கள் என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் கவலை வெளியிட்டுள்ளார்.
சாந்திகம் 'சிறுவர் உளநலம்' நூலின் வெளியீட்டு விழா யாழ். பொது நூலக மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
அன்றைய மக்கள் படிப்பறிவில் வளர்ச்சி அடையாத நிலையிலும் தமது பிள்ளைகள் கல்வியறிவில் உயர்ந்து ஒழுக்க சீலர்களாக விளங்க வேண்டும். உண்மை பேசுபவர்களாகக் காணப்பட வேண்டும் என எண்ணியதாலே அன்றைய குழந்தைகள் சிறப்பாக வளர்ந்தனர்.
அந்தக் காலத்தில் பிள்ளைகளின் நடவடிக்கைகள் தாய்மாரினால் தொடர்ந்து அவதானிக்கப்பட்டது. ஒரு சிறிய பென்சில் கூடுதலாக அவரின் புத்தகப் பையில் காணப்பட்டால் அது தொடர்பில் விசாரிப்பார்கள். இதனால், பிள்ளைகள் உண்மை பேசுகின்ற பழக்கத்தைச் சிறு வயதிலிருந்தே கற்றுக்கொண்டார்கள்.மற்றவர்கள் பொருட்கள் மீது ஆசை வைப்பதைத் தவிர்த்துக் கொண்டார்கள். அக் காலத் தாய்மார்களுக்கு உளவளம் உடலியக்கத் திறன்கள், உறவாடல் திறன்கள் பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை.
ஆனால், சமூக திறன்களை விருத்தி செய்யக்கூடிய அறம் தொடர்பில் நன்கு அறிந்து வைத்திருந்தார்கள். இதனால், அவர்களின் குழந்தை வளர்ப்பு சிறப்பாக அமைந்திருந்தது.
தற்காலத்தில் குழந்தைகள் கையடக்கத் தொலைபேசி, தொலைக்காட்சி, மடிக்கணனி, இணையத்தளங்களுடனும் கழிக்கின்றார்கள். பிறப்பிலிருந்தே இலத்திரனியல் சாதனங்களுடனும், உணர்வற்ற இயந்திரங்களுடனும் பொழுதைக் கழிக்கின்ற குழந்தைகள் இயல்பாகவே ஏனையவர்களுடன் பழகுகின்ற தன்மை, அன்பைப் பரிமாறுகின்ற தன்மை ஆகியவற்றிலிருந்து ஒதுங்கித் தனியராக வளரத் தொடங்குகின்றார்கள். இன்று அன்பு கிடைப்பதில்லை. கண்டிப்புக்கும் இடமில்லாமல் போய்விட்டது.
ஆசிரியர்கள் காட்டுகின்ற அன்பானது பிள்ளைகளைப் பாடசாலைக்கு இழுத்து வருவதற்கு ஒரு உந்து சக்தியாக விளங்க வேண்டும். எனவே, இக் குழந்தைகள் முறையாக வளர்க்கப்பட வேண்டும். இதற்காக நாமனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோமாக எனவும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment