//]]>

Wednesday, February 14, 2018

கூட்டமைப்பின் பின்னடைவை ஏற்றுக் கொண்டது ரெலோ

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு இந்தத் தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கின்றோம். எமது பின்னடைவுக்குச் சில காரணங்கள் உள்ளன. யாழ். மாநகர சபை, நல்லூர் பிரதேச சபையில் மதவாதக் கருத்துக்கள் பரப்பப்பட்டன. இதனைச் சில சுயேட்சைக் குழுக்கள் செய்தன. இறுதிப் பத்து நாட்களில் தான் எமது பிரசாரத்தைத்  தீவிரப்படுத்தியிருந்தோம். இதுவும் எமது பின்னடைவுக்கு காரணம். ஆனாலும், விரல்விட்டு எண்ணக்கூடிய சில சபைகளைத் தவிர பெரும்பாலான சபைகளின் நாங்கள் முன்னிலை வகிக்கின்றோம் என ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமும், சட்டத்தரணியுமான சிறீகாந்தா தெரிவித்துள்ளார். 

யாழில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

எதுவாகவிருந்தாலும் எந்த கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையிலே அனைத்து சபைகளின் தேர்தல் முடிவுகள் காணப்படுகின்றன. இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிலையிலிருக்கும் சபைகளில் ஆட்சி அமைக்கத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலை கூட்டணி என்பன ஒத்துழைப்புத் தர வேண்டும். சாவகச்சேரி நகர சபை, பருத்தித்துறை நகர சபை ஆகியவற்றில் முன்னிலையிலுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆட்சி அமைக்கத்  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவினை வழங்கும்.

தமிழ்த்தேசியக்  கூட்டமைப்பு வடக்கு – கிழக்கில் ஆட்சி அமைக்கத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆகியன ஆதரவு வழங்க வேண்டும். இது தொடர்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியிலிருந்து சில சாதகமான கருத்துக்கள் வந்துள்ளது எனவும் மேலும் குறிப்பிட்டார். 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment