யாழ். மாநகரசபையில் ஈ.பி.டி.பியின் ஆட்சிக் காலத்திலும், அதற்கு முன்னரும் மேற்கொள்ளப்பட்ட ஊழல்கள் தொடர்பில் விரைவில் அம்பலப்படுத்தப் போவதாக தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ். மாநகர சபை முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்த் தேசியப் பேரவை யாழ். மாநகர சபையினைக் கைப்பற்றினால் அப்போதைய முதல்வராகவிருந்த யோகேஸ்வரி பற்குணராஜாவால் கோடிக்கணக்கான நிதியினைச் செலவிட்டுத் தனது பயன்பாட்டிற்கு எனக் கொள்வனவு செய்யப்பட்ட வாகனத்தினைச் சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட வகையில் ஏலத்தில் விற்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த்தேசியப் பேரவையின் யாழ். மாநகர வேட்பாளர்களை ஆதரித்து யாழ். அரியாலையில் இன்று சனிக்கிழமை(03) பிற்பகல் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் எங்களது உரிமைப் போராட்டத்தை முன்கொண்டு செல்லாது கைவிடுவோமாகவிருந்தால் நாங்கள் சிங்களவர்களாகவும், பௌத்தர்களாகவும் மாற்றப்படுவோம். எங்களைச் சுட்டுக் கொல்வது மட்டுமல்ல இன அழிப்பு எங்களுடைய கலாசாரம் வாழ்வியல் பண்பாடு பொருளாதாரம் என யாவற்றையும் அழிப்பதும் இன அழிப்புத்தான்.
சிலாபம் பகுதியிலே இன்றும் ஏராளமான தமிழர்கள் வாழ்கின்றார்கள். அவர்களில் யாருக்கும் தமிழ் தெரியாது. தமிழர்களாகிய அவர்கள் மெதுமெதுவாக சிங்கள மொழி பேசுபவர்களாக மாற்றப்பட்டு விட்டார்கள். அவர்கள் முழுமையாக பௌத்த மயமாகிவிட்டார்கள். புத்தளத்திலும் அந்த மாற்றம் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அப்பிரதேசங்களில் ஒரு இன அழிப்பு நடந்துவிட்டது. எங்களுடைய தாயகப் பிரதேசங்களை நீங்கள் பார்த்தால் அது சிலாபம் வரை நீண்டு செல்கின்றது.
அதேபோல வட- கிழக்கிலும் வெகு விரைவாகச் செய்யதற்காக முனைப்புக்கள் எங்களது தலைமைகள் எனக் கூறிக்கொள்கின்ற தரப்புக்களின் ஒத்துழைப்புடனேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனை நாங்கள் தடுத்து நிறுத்த வேண்டுமாயின் எங்களது உரிமைப் போராட்ட அரசியல் தொடர்ந்து முன்கொண்டு செல்லப்படவேண்டும். அதனை முன்னெடுத்துச் செல்கின்ற ஒரே தரப்பாக நாங்கள் காணப்படுகின்றோம். எனவேதான் தமிழ் மக்கள் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்ற எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என நாங்கள் மக்களிடம் கேட்கின்றோம்.
எங்களுடைய கலாசாரம், வாழ்வியல், பண்பாடு, பொருளாதாரம் என்பவை பாதுகாக்கப்பட வேண்டுமாக இருந்தால் அந்த மண் தமிழர்களுடையதாக தமிழர்களின் கட்டுப்பாட்டிலிருக்க வேண்டும். எனவேதான் நாங்கள் சமஷ்டித் தீர்வினை வலியுறுத்துகின்றோம் எனவும் தெரிவித்தார்.
(தமிழின் தோழன்-)
0 comments:
Post a Comment