வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(11) ஒரேநாளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தேறியுள்ளன.
இதனால், செல்வச்சந்நிதி முருகன் ஆலயச் சூழலே ஆலய வருடாந்த மஹோற்சவத் தேர்த்திருவிழா போன்று விழாக் கோலம் பூண்டிருந்தது.
நேற்றைய தினம் திருமண சுபமுகூர்த்த நாள் என்பதாலும், நாளை பஞ்சாங்க முறைகளுக்கமைய மாசி மாதத் தமிழ்மாதம் பிறக்கின்றமையாலும் ஒரேநாளில் பல எண்ணிக்கையான திருமணங்கள் தமிழர் பகுதிகளில் நிச்சயிக்கப்பட்டிருந்தன.
இதற்கமைவாகவே, நேற்றைய தினம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் ஒரேநாளில் பல திருமணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதனால், நேற்றைய தினம் ஆலயத்தில் திருமண நிகழ்வுகள் இடம்பெறுவதில் நெருக்கடி நிலை ஏற்பட்டிருந்தது. குறிப்பாக ஒரு ஜோடிக்குத் திருமணம் இடம்பெறுகின்ற போது வேறு சில ஜோடிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி ஏற்பட்டது.
நேற்றைய தினம் செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த ஜோடிகள் மாத்திரமன்றி வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த ஜோடிகளும் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
(எஸ்.ரவி-)
0 comments:
Post a Comment