யாழ். ஈவினை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் இன்று சனிக்கிழமை(10) காலை தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி வாக்குச் சாவடியில் நடந்த முறைகேடொன்று தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற குப்பிளான் பகுதியைச் சேர்ந்த தினகரன் பத்திரிகையின் ஊடகவியலாளரும், சுயாதீன ஊடகவியலாளர் தேர்தல் கடமையில் நின்ற பொலிஸ் அதிகாரியால் கடுமையாக அச்சுறுத்தப்பட்டதுடன் அவரைக் கைது செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் வாக்களிப்பு நிலையத்திற்குள் வாக்குப் பெட்டிக்கு அருகில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்திற்குப் புள்ளடியிடுமாறு குறிக்கும் வகையிலான மாதிரி வாக்குச் சீட்டொன்று அங்கு நின்ற கூட்டமைப்பிற்கு ஆதரவான சிற்றூழியரொருவரால் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காலை-08 மணியளவில் வாக்களிப்பு நிலையத்திற்கு வந்திருந்த பட்டதாரிப் பெண்ணொருவர் இந்த விடயம் தொடர்பில் கண்டறிந்து பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து, இந்த விடயம் பூதாகரமாக மாறியுள்ளதுடன் வாக்களிப்பு நிலையத்திற்குள் ஒருவிதக் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்துச் சுமார் ஐந்து நிமிடங்களுக்கு மேலாக வாக்களிப்புப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன. சர்ச்சைக்குரிய குறித்த வாக்குச் சீட்டு அங்கிருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து வாக்களிப்பு வழமை போன்று இடம்பெற்றது. எனினும், அதற்கு முன்னர் பல வாக்காளர்கள் குறித்த மாதிரி வாக்குச் சீட்டைப் பார்த்து வாக்களித்திருப்பார்கள் என நம்பப்படுகிறது. ஏனெனில், குறித்த வாக்குச் சாவடிக்குட்பட்ட பகுதி வாக்காளர்களில் பல பாமர வாக்காளர்களும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த வாக்களிப்பு நிலையத்தில் நடந்த தேர்தல் விதி மீறல் தொடர்பாகக் கேள்விப்பட்டுச் சம்பவ இடத்திற்குச் செய்தி சேகரிக்கச் சென்ற குப்பிளானைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் குறித்த வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் நின்ற தேர்தல் அதிகாரியிடம் தான் தினகரன் பத்திரிகை மற்றும் சுயாதீன ஊடகவியலாளர் என அறிமுகம் செய்து இந்த விடயம் தொடர்பில் வினாவிய போதும் அதற்கு அவர் பதிலளிக்க மறுப்புத் தெரிவித்துள்ளதுடன் குறித்த ஊடகவியலாளரை பொலிஸாரை ஏவி விட்டு அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றியுள்ளார்.
இதனையடுத்து அங்கு தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த சுன்னாகம் பொலிஸ் அதிகாரியொருவரால் குறித்த ஊடகவியலாளர் கடுமையாக மிரட்டப்பட்டதுடன் அவர் தன் வசம் வைத்திருந்த ஒலிப்படக் கருவியும் பறிமுதல் செய்யப்பட்டது. குறித்த பொலிஸ் அதிகாரி பொலிஸ் சீருடை அணிந்திருந்த போதிலும் அவரது சீருடையில் பொலிஸாருக்கு வழங்கப்படும் தொடரிலக்கப் பட்டி காணப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த பொலிஸ் அதிகாரி உட்பட மூன்று பொலிஸார் இணைந்து குறித்த ஊடகவியலாளரைத் துரத்தியதுடன் அவரைக் கடுமையாக அச்சுறுத்திக் கைது செய்யவும் முற்பட்டுள்ளனர். இதன் போது அப்பகுதியில் நின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரின் கவனத்திற்கு இந்த விடயத்தைப் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் கொண்டு சென்ற போதும் அவர் பொலிஸாருக்குச் சார்பாகச் செயற்பட்டதாகப் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட குறித்த ஊடகவியலாளரின் ஒலிப்பதிவுக் கருவி இன்னமும் மீளவும் வழங்கப்படவில்லை எனப் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் கவலையுடன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சம்பவத்துக்குக் காரணமான பொலிஸார் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனப் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, மேற்படி வாக்களிப்பு நிலையத்தில் நடந்த தேர்தல் விதிமீறல் செயற்பாட்டிற்குச் சுன்னாகம் பொலிஸாரும் உடந்தையாகச் செயற்பட்ட காரணத்தாலேயே இந்த விடயத்தின் உண்மை நிலைவரம் வெளியே வந்துவிடக் கூடாது எனும் நோக்கில் தான் பொலிஸாரால் கடுமையாக அச்சுறுத்தப்பட்டிருக்கக் கூடுமெனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment