//]]>

Friday, February 9, 2018

தொடர்ந்தும் மூடப்பட்ட நிலையில் பருத்தித்துறை-பொன்னாலை வீதி: யாரை ஏமாற்றுகிறது அரசு?(Photo)

யாழ். மாவட்டத்தின் வலிகாமம் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த பருத்தித்துறை-பொன்னாலை வீதி சுமார் இருபத்தெட்டு வருடங்களின் பின் கடந்த செவ்வாய்க்கிழமை(06) காலை மயிலிட்டியில் பொதுமக்கள் பாவனைக்காகத் திறந்து விடப்படுவதாக அறிவித்திருந்த போதும் குறித்த வீதி தற்போதும் மூடப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது.

எனினும், குறித்த வீதி  திறப்பு நிகழ்வின் போது ஆரம்பித்து வைக்கப்பட் போக்குவரத்துச் சபை பஸ் சேவையில் ஈடுபட்ட போதும் அதன் பின்னர் குறித்த வீதி இராணுவத்தினரால் இழுத்து மூடப்பட்ட நிலையிலேயே தொடர்ந்தும் காணப்பட்டது.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் மீள்குடியேற்றப்பட்ட பகுதிப் பொதுமக்கள் கடும் விசனம் வெளியிட்டிருந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டி ஊடகங்களும்  செய்திகள் வெளியிட்டிருந்தன.

இதனையடுத்து இந்த விடயம் உடனடியாக உடனடியாக ஜனாதிபதி செயலகத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து குறித்த வீதியின் ஊடாக போக்குவரத்துச் சேவைகள் நடாத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதன்படி இன்று வெள்ளிக்கிழமை(09) முற்பகல்-11 மணிக்குப் பருத்தித்துறைப் பேருந்து நிலையத்திலிருந்து  இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து யாழ். கீரிமலையை நோக்கிப் புறப்பட்டது. இன்றைய தினம் இந்த வீதியால் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்தில் குறைந்தளவான பொதுமக்களே பயணம் செய்துள்ளனர். இராணுவத்தினரின் கெடுபிடியே இதற்கான காரணமெனக் கூறப்படுகிறது.

குறிப்பாக பயணிகளுடன் துப்பாக்கி ஏந்திய இராணுவமும் பயணித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் அச்சத்துடனேயே பயணம் செய்ததாகவும் எமது செய்திச் சேவைக்கு நம்பகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆனால், இதன் பின்னர் எந்தவொரு பேருந்துகளும் சேவையில் ஈடுபடவில்லை. இன்றைய தினம் ஒரு அரச பேருந்து மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்படுமென முன்னரே அறிவிப்பு வெளியானதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை, பருத்தித்துறை-பொன்னாலை வீதி திறப்பு அரசாங்கத்தின் தேர்தல் கால ஏமாற்று நாடகமே எனப் பல தரப்பினரும் கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது இவ்வாறிருக்க இம்முறை உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் இளவாலையைச் சேர்ந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேட்பாளரொருவரும், வேறொரு நபரும் பருத்தித்துறை-பொன்னாலை வீதி தொடர்பில் அரசாங்கத்திற்குச் சார்பான பொய்யான தகவல்களை எமது மக்கள் மத்தியில் பரப்பி வருவதுடன், எமது ஊடகவியலாளர் முன்னர் வெளியிட்ட செய்தி தவறானது எனவும் அவதூறு பரப்பி வருகின்றனர். இது தொடர்பில் எமது மக்களே தொடர்ந்தும் அவதானத்துடன் இருங்கள்! 

இது தொடர்பில் எமது யாழ். மாவட்ட விசேட செய்தியாளர் இன்றைய தினம் மயிலிட்டிப் பகுதிக்குச் சென்று நன்கு ஆராய்ந்துள்ளார். இது தொடர்பான உண்மை நிலைவரங்கள் தொடர்ந்தும் எமது செய்திச் சேவையூடாக வெளியிடப்படும். நாளைய தினம் எதிர்பாருங்கள்....







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment