//]]>

Wednesday, March 7, 2018

முஸ்லீம்களுக்கெதிரான கலவரம்:சுரேஷ் பிரேமச்சந்திரன் எழுப்பியுள்ள சந்தேகங்கள்!(Video)


கண்டியைச் சேர்ந்த அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பிலுள்ள அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கண்டியில் இடம்பெற்ற கலவரம் ஒரு திட்டமிட்ட கலவரமெனவும், அங்கு நடந்தேறிய வன்முறை வெளிநபர்களால் தான் நடாத்தப்பட்டதெனவும், ஆகவே, இந்தச் சம்பவத்திற்கு முஸ்லீம் மக்களிடம் சிங்கள மக்கள் மன்னிப்புக் கோர வேண்டுமெனவும் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாட்டில் முஸ்லீம் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கலவரங்கள் அரசாங்கத்திற்குத் தெரியாமல் இடம்பெறுகின்றதா? இல்லாவிடில் தெரிந்தும் அரசாங்கம் கண்டும் காணாமலும் இருக்கிறதா?என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை(07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

சட்டம், ஒழுங்கைக் கண்காணிக்கக் கூடியவர்கள்  சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பான அமைச்சர்களிற்கு என்னனென்ன விடயங்கள் நடந்தேறுகின்றன என்பது நிச்சயமாகத் தெரிந்திருக்கும்.

இலங்கையில் பல்வேறுபட்ட புலனாய்வுத் துறைகளிருக்கின்றன. அரசாங்கத்திடம் பொலிஸ் சி. ஐ.டி மாத்திரமல்ல அவர்களுக்குள்ளேயே பல புலனாய்வுத் துறைகள் காணப்படுகின்றன. இராணுவத்திடம் புலனாய்வுத் துறையிருக்கிறது. பயங்கரவாதத்திற்கெதிரான புலனாய்வுத் துறை உள்ளிட்ட புலனாய்வுத் துறைகள் இதனுள் அடக்கம்.

இவ்வாறானதொரு சூழலில் இன வன்முறைகளை முன்கூட்டியே கண்டறிந்து நிறுத்த முடியாமைக்கான காரணங்களை ஜனாதிபதி, பிரதமர் போன்றோர் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

இவர்களுக்குத் தெரியாமல் தான் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகிறது எனில் சட்டம், ஒழுங்கு இவர்கள் கைகளில் இல்லையா?, இந்த நாடு எங்கே நோக்கிப் போகிறது போன்ற கேள்விகளும் எழுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

(தமிழின் தோழன்-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment