தமிழர் தேசத்தின் இதய ஆத்மாவாக உள்ளிருந்து எங்கள் மொழியாகி, எங்கள் கலையாகி, எங்கள் மூச்சாகி, எங்கள் வாழ்வுமாகி, எங்களையெல்லாம் இயக்குகின்ற உந்துசக்திகளை, மாசுமருவற்ற ஒப்பற்ற மான மாமறவர்களை எங்கள் நெஞ்சத்தில் கொலு இருத்தி கௌரவப்படுத்துகின்ற – மதிப்பளிக்கின்ற ‘தமிழ் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27’ - 2016 எழுச்சி நினைவேந்தல், வவுனியா பொங்குதமிழ் பிரகடன நினைவுத்தூபி முற்றத்தில் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு அனுட்டிக்கப்பட்டது.
அங்கு அஞ்சலிக்காக அமைக்கப்பட்டிருந்த மாவீரர் கல்லறைக்கு, தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்க பொருளாளர் திருமதி காசிப்பிள்ளை ஜெயவனிதா, வடக்கு மாகாணசபை உறுப்பினர் ம.தியாகராசா ஆகியோர் மலர்மாலைகளை அணிவித்தனர்.
6 மணி 5 நிமிடத்துக்கு ‘வணக்கம் சொல்லி வணங்குகிறோம் எங்கள் வீரர் உங்கள் மலர் பாதம், உம்மை நினைக்கும் எங்கள் மனங்களிலே உங்கள் நினைவுகள் எல்லாம் மனப்பாடம்’ மாவீரர் நினைவேந்தல்பா ஒலிக்க… பொதுச்சுடரினை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கோ.ராஜ்குமார் ஆகியோர் கூட்டாக ஏற்ற, மாவீரர் கல்லறைக்கான தீப ஒளியை வவுனியா மாவட்ட ஊடகவியலாளரும், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைமைக்குழு உறுப்பினருமாகிய சு.வரதகுமார் ஏற்றினார்.
சமநேரத்தில் ஈகைச்சுடர்களை மாவீரர்களின் பெற்றோர்களும், உறவினர்களும், நண்பர்களும், பொதுமக்களும் ஏற்றினர். தொடர்ந்து மலர் வணக்கத்தை வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் முன்னாள் தலைவரும், தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினருமாகிய கி.தேவராசா தொடக்கி வைத்தார்.
அப்பழுக்கற்ற தங்கள் மாவீரப்பெருந்தகைகளிடம் இதுநாளுமான தங்கள் வாழ்நாள் குறைகள் சொல்லி, மனச்சுமைகள் இறக்கி உறவுகள் வாய்விட்டுக் கதறி அழுதவேளை வீதியால் பயணித்தவர்களும் பொங்குதமிழ் பிரகடன நினைவுத்தூபி முற்றம் ஏகி, மாவீரர்களை உணர்வுபூர்வமாக அஞ்சலித்து வீரவணக்கம் செலுத்தினர்.
0 comments:
Post a Comment