//]]>

Tuesday, December 27, 2016

நாடு விட்டுச் சென்றவர்களுக்கு வடக்கு முதல்வரின் கோரிக்கை(Photos)


முன்னொரு காலத்தில் குறுகிய வருமானத்தில் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தார்கள். ஆனால் யுத்தத்தாலத்தில் ஏற்பட்ட தாக்கம் அவர்களை நகர்ப்புறம் நோக்கி நகரச் செய்தது. பிள்ளைகளைக் கற்பிப்பதற்கு சிறந்த பாடசாலைகள் தேவையாயிருந்தன. பொழுது போக்குச் சாதனங்கள் மற்றும் இன்னோரன்ன வசதிகள் அவர்களை நகர்ப்புறங்களில் வரவேற்றன. இவை அவர்களை மீண்டும் கிராமத்திற்கு செல்லவிடாது தடுக்கின்றன. நாடு விட்டுச் சென்றவர்கள் கிராமங்களுக்கு வந்து பயனுள்ள அமைதி வாழ்க்கையை வாழுங்கள் எனக் கோரிக்கை விடுத்தார் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன். 

வடமாகாணத் தென்னை அபிவிருத்திச்சபையின் ஏற்பாட்டில் தென்னை அபிவிருத்திப்  பயனாளிகளுக்கான மானியம் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை(27) முற்பகல் யாழ். நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,  

புலம்பெயர்ந்து சென்றவர்கள் கிராமத்திற்கு வந்தால் என்ன... வராவிட்டால் என்ன.... இங்குள்ள தரிசு நிலங்கள் அனைத்தும் தென்னந்தோப்புக்களாக மாற்றப்பட வேண்டும். அதற்காகத் தென்னை அபிவிருத்தி சபையும், அவ்வப் பகுதி பிரதேச செயலர்கள், கிராம உத்தியோகத்தர்கள் ஆகியோரும் வேண்டிய உதவிகளை எம்மக்களுக்கு வழங்க வேண்டும். எம்மக்களின் பயிர்ச்செய்கை ஊக்குவிக்கப்படல் வேண்டும்.

நான் 1980 ஆம்,1981 ஆம் ஆண்டுகளில் சாவகச்சேரியில் மாவட்ட நீதிபதியாகக் கடமையாற்றியவன். இரு கிழமைகளுக்கு ஒரு முறை பளை சுற்று நீதிமன்றுக்குச் சென்று வந்தவன். அப்போது தென்மராட்சி மண்ணின் செழுமையைக் கண்டு இரசித்தவன். 

மணல் பாங்கான அங்குள்ள மண் தென்னைக்கு மிகவும் உகந்தது. ஆனால், கடந்தகாலத்தில் ஏற்பட்ட கடுமையான யுத்தங்களின் போது இடம்பெற்ற எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக வருமானம் தரக்கூடிய அனைத்துப் பயிர்களும் சிரச்சேதம் செய்தது மட்டுமன்றி அவற்றிலிருந்து வருமானத்தை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களை ஏதிலிகளாக மாற்றியது. 

அம்மக்கள் வருமானத்தை இழந்து குடும்பத்தை எவ்வாறு கொண்டு செல்வது என்று வகைதெரியாமல் இன்னமும் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். யுத்தம் என்பது வெறுமனே துப்பாக்கிச் சூடும், செல் தாக்குதலுமாக இருக்கவில்லை. பொருளாதார ரீதியாக நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டோம். பல பாரிய தென்னை மரத் தோட்டங்களும், ஏனைய வீடு வாசல்களில் காணப்பட்ட தென்னை மரங்களும்  அடியோடு அழிக்கப்பட்டன. தென்மராட்சிப் பகுதி ஒரு சூனியப் பிரதேசமாக அல்லது கட்டாந்தரையாக ஆக்கப்பட்டது 
இவ்வாறான பாதிப்புக்களுக்கு ஆளாகிய மக்களுக்கு உதவுவதற்காகவே தென்னை பயிர்ச்செய்கை சபை மானிய உதவிகளையும், தென்னை மரக்கன்றுகள், அவற்றிற்கான உர வகைகள், மருந்துகள், விவசாய அறிவுறுத்தல்கள் ஆகிய அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றது. மீண்டும் இந் நிலங்களில் தென்னை மரச் சோலைகளை உருவாக்கி வருவாயைப் பெருக்குவதற்கு முயலுகின்றது. 

இவ் வேளையில் அவர்களின் முயற்சிக்கு உறுதுணையாகவும், உந்து சக்தியாகவும் நாமும் எமது சக்திக்கு ஏற்ற வகையில் உதவிகளை வழங்குவதற்கு முன்வர வேண்டும்.  முடியுமானவரை தென்னைகளை நாட்ட முன்வர வேண்டும். 
தென்னையின் முக்கியத்துவம் ஒளவையாரின் காலத்திலேயே உணரப்பட்டிருந்தது. இதனால்த் தானோ என்னவோ முன்னைய காலத்தில் கூடுதலான செல்வந்தர்களும், பணம் படைத்தவர்களும், தென்மராட்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பகுதிகளில் ஏக்கர் கணக்கான தரிசு நிலங்களை வாங்கி அவற்றில் தென்னைப் பயிர்ச்செய்கையை மேற்கொண்டு தமது வருவாயை வளப்படுத்திக் கொண்டனர். 

அவர்களின் வீட்டுச் செலவுக்கும் பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளுக்கும் இத் தென்னை மரங்கள் மூலம் கிடைக்கின்ற வருவாய் மிகவும் போதுமானதாக இருக்கும். அதற்கு மேலாக அவர்களின் தொழில் மூலம் கிடைக்கின்ற வருவாய்கள் மேலதிக வருவாய்களாகவே அமைந்திருப்பன. அதனால் தானோ என்னவோ அப்பகுதி மக்கள் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தனர். 

காணியுள்ள  ஒவ்வொரு வீட்டிலும்  உருவாக்கப்படுகின்ற குறைந்த பட்சம்  ஐம்பது தென்னை மரங்கள் முறையாக பராமரிக்கப்படின் குறிப்பிட்ட 05 வருட காலப்பகுதியில் தானுண்ட நீரைத் தலையாலே தருவதற்குத் தென்னைகள் தயாராகிவிடுவன. 

இன்று யுத்தம் முடிவுற்று 07 வருடங்கள் முடிவடைந்துவிட்டன. பலரின் காணிகள் விடுவிக்கப்பட்டு ஐந்து அல்லது ஆறு  வருடங்களுக்கு மேற்பட்ட போதும் அவற்றில் இது வரை எந்தவித பயிர்ச் செய்கையும் மேற்கொள்ளாது அவை தரிசு நிலங்களாக காணப்படுவது வேதனைக்குரியது எனவும் தெரிவித்தார். 





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment