//]]>

Wednesday, December 28, 2016

யாழில் எம்.ஜி.ஆர் நினைவாக 'தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி' (Photos)


யாழில் எம்.ஜி. ஆர் நினைவாகத் "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி" எனும் பெயரில் புதிய அரசியல்கட்சி  திங்கட்கிழமை(26)  உதயமாகியுள்ளது. 

யாழ்.கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலய முன்றலில் அனைத்துலக எம்.ஜி. ஆர் பேரவையின் ஏற்பாட்டில் தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவு நாள், மற்றும் முன்னாள் அனைத்துலக எம்.ஜி.ஆர்  பேரவையின் தலைவர் பொன் மதிமுகராஜாவின் 18 ஆவது ஆண்டு நினைவு நாள், ஆழிப் பேரலையின் 12 ஆவது ஆண்டு நினைவு நாள் என்பன முப்பெரும் விழாவாக இடம்பெற்ற போது இரவு -07.30 மணியளவில் புதிய கட்சி தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பைக் கட்சியின் செயலாளர் பொதுமக்கள் முன்னிலையில் வெளியிட்டார். 
இதன்படி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் மாநகர சபை உறுப்பினரும், தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி. ஆரின் தீவிர இரசிகருமான செல்லையா விஜயரட்ணம் கட்சியின் தலைவராகவும், அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவையின் தலைவர் பொன் மதிமுகராஜா விஜயகாந்த் கட்சியின் செயலாளர் நாயகமாகவும், இ.வசந்த் கட்சியின் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார்
முன்னதாகத் தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் உருவப் படத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன், அண்மையில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி-ஜெயலலிதா ஜெயராம் மற்றும் முன்னாள் அனைத்துலக எம்.ஜி.ஆர்  பேரவையின் தலைவர் பொன் மதிமுகராஜாவின் உருவப் படங்களிற்குத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் செல்லையா விஜயரட்ணம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
ஈழத்தின் பிரபல பாடகரான சுகுமாரும் எம்.ஜி.ஆரின் உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.  

கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்-26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது உயிர் நீத்த அனைத்து உறவுகளுக்காகவும் இதன் போது மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நினைவுரைகளை வடமாகாண உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான செல்லையா விஜயரட்ணம் ஆகியோர் நிகழ்த்தினர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment