//]]>

Monday, December 26, 2016

தெல்லிப்பழையில் சுனாமி நினைவேந்தல் அனுஷ்டிப்பு(Photos)

சுனாமிப் பேரலையின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று திங்கட்கிழமை(26) தெல்லிப்பழையிலுள்ள சிற்பாலயம் கலைக் கூடத்தில்  இடம்பெற்றது

மல்லாகம்-தெல்லிப்பழை லயன்ஸ் கழகம், யாழ்.திருமறைக் கலாமன்றம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்விற்கு யாழ்.தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் ஓய்வு நிலை அதிபர் லயன் பொ.சுந்தரலிங்கம் தலைமை வகித்தார்.  

மறைந்த சிற்பக் கலைஞர் ஏ.வி. ஆனந்தனின் கைவண்ணத்தில் உருவான வரலாற்றுப் பெருமை மிகு சுனாமி சிற்பத்தின் முன்பாகச் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பிரமுகர்கள், மாணவர்கள்,பொதுமக்கள் உள்ளிட்டோர் காலை-09.26 மணியளவில் மெழுகுதிரியேற்றி மெளன அஞ்சலி செலுத்தினர். 
அதனைத் தொடர்ந்து விளான் பங்குத் தந்தை எஸ். மனுவல், யாழ். பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் நா.சண்முகலிங்கன், யாழ்.பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் க.சிவராசா, வைத்தியகலாநிதி செல்வி- ஜெயந்திதேவி சேனாதிராசா, யாழ்.திருமறைக் கலாமன்ற நிர்வாக இயக்குனர் கலாபூஷணம் ஜி.பி.பேமினஸ், ஆசிரியர் எஸ்.விஜயன் ஆகியோர் சுனாமி தொடர்பாகவும், மறைந்த சிற்பக் கலைஞர் ஏ.வி. ஆனந்தன் தொடர்பாகவும் நினைவுரைகளையும், கருத்துரைகளையும் நிகழ்த்தினர். 
யாழ்.திருமறைக் கலாமன்றக் கலைஞர் எம்.ஜேசுதாசன் சுனாமிப் பேரலையின் ஆறாத நினைவுகளை மீட்டிப் பார்க்கும் வகையில் நினைவுப் பாடல் பாடி உருகாத மனங்களையும் உருக வைத்தார்.
அத்துடன் சிற்பக் கலைஞர் ஏ.வி. ஆனந்தனின் உறவினரால் 85 வரையான வறுமைக் கோட்டுக்குட்பட்ட பாடசாலை மாணவ,மாணவிகளுக்குக் கற்றல் உபகரணங்களும், 20 வரையான பயனாளிகளுக்குப்  பயன்தரு மரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment