//]]>

Tuesday, January 17, 2017

தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் கோரிக்கைகள் மற்றும் அபிலாசைகளை வெளிக்கொணரும் எழுக தமிழ் பேரணியில் அனைவரையும் கலந்து கொள்ள அழைப்பு

கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள எழுக தமிழ் பேரணியில் அனைவரும் அணிதிரள வேண்டும் என்று தமிழ்ச்  சட்டத்தரணிகள் பேரவை அழைப்பு விடுத்துள்ளதுடன் தமிழ் மக்களின் நீண்டகால  அரசியல் கோரிக்கைகள் மற்றும் அபிலாசைகளை வெளிக்கொணரும் முகமாக முன்னெடுக்கப்படும்   இப்பேரணியில்  வடக்குக்  கிழக்கிலுள்ள அனைவரும் பங்குபற்றி ஒன்றிணைந்து   குரல்கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளது.

இது தொடர்பாகத் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை இன்று செவ்வாய்க்கிழமை(17) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ்  மக்கள் பேரவையினால்  தமிழர் தேசம், பிரிக்கப்படாத வட- கிழக்கு தமிழர் தாயகம், இறைமை, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான இணைந்த வடக்குக் கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு அவசியம் என்பதை வலியுறுத்தி ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்தப் பேரணியில்  பங்குபெற்றுவது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

மேலும் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள நிலையில், தமிழ் மக்களின் அபிலாசைகளை உலகுக்கு வெளிப்படுத்தும் வகையில் இந்த எழுக தமிழ் பேரணி முக்கியத்துவம் பெறுகிறது. இச்சந்தர்ப்பத்தில் வடக்குக் கிழக்கு மக்களின் ஒன்றித்த குரலாக இப்பேரணி அமைய வேண்டும் என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

நல்லிணக்க செயற்பாடுகளில் தமிழ்மக்கள்  நம்பிக்கை இழந்து வரும் சூழலில் அதனை உறுதிப்படுத்தும் வகையில்   தமிழ் மக்களுக்கான தீர்வு சமஷ்டி முறையில் இருக்கப் போவதில்லை. போர்க்குற்றங்கள், இனப்படுகொலை தொடர்பான விசாரணையில் சர்வதேதச பங்களிப்புக்கு இடமில்லை. வடக்குக் கிழக்கு இணைப்புக்கு வாய்ப்பேயில்லை எனச் சிறிலங்கா அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இவ்வாறு ஒன்றித்த குரலாகத் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக எடுத்துச் சொல்லவேண்டிய  தார்மீகக் கடப்பாடு  தமிழ் மக்களுக்கு உண்டு. சர்வதேச ஒழுங்கு முறைக்கு அமைவாக அடக்கப்பட்ட ஒடுக்கு முறைகளுக்குள்ளாகி இன அழிப்பைச்  சநதித்த சமூகமொன்று தனக்கான விடுதலை பற்றி வெளியுலகுக்கு அதியுச்ச அளவில் அழுத்திச் சொல்லவேண்டிய தேவையுள்ளது.  

தமிழ் தமிழ் மக்களின் நீண்டகால  அரசியல் கோரிக்கைகள் மற்றும் அபிலைஷைகளை வெளிக்கொணருமுகமாக முன்னெடுக்கப்படும்   இப்பேரணியில்  வடக்குக்  கிழக்கிலுள்ள அனைவரும் பங்குபற்றி ஒன்றிணைந்து   குரல்கொடுக்க வேண்டும் என  தமிழ்ச்  சட்டத்தரணிகள் பேரவை கோரிநிற்பதோடு தனது பூரண பங்களிப்பையும் வழங்கி நிற்கிறது எனவும் அந்தச் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment