//]]>

Friday, January 27, 2017

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் கொலை வழக்கு: பொலிஸ் உத்தியோகத்தர்களின் விளக்கமறியல் நீடிப்பு


யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் விளக்கமறியல் எதிர்வரும் பெப்ரவரி மாதம்-09 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று வெள்ளிக்கிழமை(27) யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்தரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

யாழ். கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம்- 20 ஆம் திகதி இரவு யாழ். பல்கலைக்கழக மூன்றாம் வருட கலைப்பீட மாணவர்களான விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் பலியாகியிருந்தனர். இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் மீண்டும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது உயிரிழந்த  மாணவர்களின் மரணச் சான்றிதழ் யாழ். போதனா வைத்தியசாலையால் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்களுக்குப் பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்தால் நடவடிக்கை எடுப்பதற்கான பொலிஸ்மா அதிபரின் உறுதிமொழி அடங்கிய அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகளும் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment