ஏழைகளின் மருத்துவக் கல்வியைக் கேள்விக் குறியாக்கும் மாலபே SAITAM தனியார் மருத்துவக் கல்லூரியைத் தடை செய்ய வலியுறுத்தி யாழ்.பல்கலைக் கழக மருத்துவபீட மாணவர்களின் ஏற்பாட்டில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி இன்று வெள்ளிக்கிழமை(27) காலை-09.30 மணியளவில் யாழ்.பல்கலைக் கழக மருத்துவபீடம் முன்பாக ஆரம்பமாகியுள்ளது.
இந்தப் பேரணியில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் யாழ்.பல்கலைக் கழக மருத்துவபீட மாணவர்களுடன் இணைந்து ஏனைய பீட மாணவர்கள், , கொக்குவில் தொழிநுட்பவியல் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர் கலாசாலை மாணவர்கள், இலங்கை ஆசிரியர் சங்கம்,சமூகநீதிக்கான வெகுஜன அமைப்பு உள்ளிட்ட பொது அமைப்புக்கள், இலங்கை ஆசிரியர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என நூற்றுக் கணக்கானோர் அணிதிரண்டு பங்கேற்றுள்ளனர்.
இந்தப் பேரணியில் கலந்து கொண்டுள்ள மருத்துவபீட மாணவர்கள் "ஏழைகளுக்கு மருத்துவக் கல்வி எட்டாக் கனியா?", "இலவசக் கல்விக்கு அச்சுறுத்தல்", "பணக்காரர் மட்டும் வைத்தியர் ஆவதா?", நல்லாட்சியின் கறுப்புப் புள்ளி உள்ளிட்ட பல்வேறு பாதாதைகளைத் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தாங்கியுள்ளதுடன் பல்வேறு கோஷங்களையும் எழுப்புகின்றனர்.
இந்த மாபெரும் பேரணி யாழ்.மாவட்டச் செயலகத்தைச் சென்றடைந்ததைத் தொடர்ந்து யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வடமாகாண ஆளுநருக்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜர்கள் கையளிக்கவுள்ளதாக பேரணியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மாணவர்களின் பேரணி காரணமாக யாழ்.பலாலி வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment