//]]>

Monday, October 9, 2017

கூட்டமைப்பின் தலைமை அரசியல் கைதிகளது விடுதலையில் உரிய கவனத்தைச் செலுத்தவில்லை


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை எங்களது விடுதலை தொடர்பாக உரிய கவனத்தைச் செலுத்தவில்லை. எங்களது பிரச்சினைக்கு கூட்டமைப்பின் தலைமை நினைத்திருந்தால் எப்போதோ தீர்வு பெற்றுத் தந்திருக்க முடியும். ஆனால், அவர்கள் தொடர்ந்தும் அசமந்தப் போக்குடன் செயற்படுவதாக உண்ணாவிரமிருந்து வரும் அரசியல் கைதிகள் வருத்தத்துடன் தெரிவித்ததாக வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். 

தமது வழக்குகளை வேறிடங்களுக்கு மாற்ற வேண்டாம் எனத் தெரிவித்து தமிழ் அரசியல் கைதிகள் மூவர் அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளை வடமாகாண அவைத்தலைவர் சீ. வீ. கே.சிவஞானம் தலைமையிலான வடமாகாண சபை உறுப்பினர்கள் சனிக்கிழமை(08) பிற்பகல் சந்தித்துப் பேசினார். 

இந்தச் சந்திப்புத் தொடர்பிலும், குறித்த சந்திப்பின் போது அரசியல் கைதிகள் விடுத்த கோரிக்கைகள் தொடர்பிலும் நேற்றைய தினம்(08) வினாவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், 

ஞாயிற்றுக்கிழமை(08) முதல் தாங்கள் நீர் ஆகாரம் கூட அருந்தாமல், மருத்துவ சிகிச்சைகள் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எம்முடனான சந்திப்பின் போது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகள் எம்மிடம் தெரிவித்தனர். 

இந்தச் சந்திப்பின் போது தொடர்ச்சியான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் காரணமாக உங்களுடைய சிறுநீரகங்கள் செயலிழக்க வேண்டிய மோசமான நிலைமை ஏற்படுமெனத் தற்போதைய வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் வடமாகாண அமைச்சருமான சத்தியமூர்த்தி சுட்டிக் காட்டியதுடன், இது போன்ற  காரணங்களால் உங்களுடைய உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொள்வதற்கு இங்கு வந்துள்ளோம் எனச் சுட்டிக் காட்டினார். ஆனாலும், அவரது கருத்தை ஏற்றுக் கொள்வதற்கு உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகள் மறுப்புத் தெரிவித்து விட்டனர். 

ஆன போதும், உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள மூன்று அரசியல் கைதிகளதும் கோரிக்கைகள் நியாயமானது.

சரியான, தெளிவான முடிவு வரும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என உண்ணாவிரதமிருந்து வரும் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர். நியாயாதிக்க எல்லைக்கு அப்பாற்பட்ட பகுதிகளுக்குத் தங்களது வழக்குகள் மாற்றப்படக் கூடாது என்பதே உண்ணாவிரதமிருந்து வரும் அரசியல் கைதிகளின் பிரதான கோரிக்கையாகும். 

அவர்களின் வழக்குகள் அனுராதபுரம்  விசேட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளமையால் அவர்கள் மொழி ரீதியில் பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். ஏற்கனவே அவர்களது  குடும்பங்கள்  பொருளாதார ரீதியாகப் பெரும் பின்னடைந்த நிலையிலுள்ளது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஏற்கனவே தமக்கு வழங்கிய வாக்குறுதிகள் காப்பாற்றப்படவில்லை. இதன் காரணமாக நாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் எனவும் அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்து வரும் அரசியல் கைதிகள் எம்மிடம் கவலையுடன் தெரிவித்தனர். 

கடந்த 14 நாட்களாக அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்து வரும் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு உடனடி முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.  கூட்டமைப்பின் தலைவர் இது சம்பந்தமாக உடனடியாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சட்டமா அதிபருடன் கலந்துரையாடி அரசியல் கைதிகள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்க முன்வர வேண்டும். 160 அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுவிப்பது சாத்தியமில்லாது போனால் கட்டம் கட்டமாகவேனும் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment