இவ்வருடத்துக்கான தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் யாழ். புனித ஜோன் போஸ்கோ வித்தியாலய மாணவி உதயகுமார் அனந்திகா வடமாகாணத்தில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.
யாழ்.தெல்லிப்பழைப் பன்னாலைப் பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவி கடந்த கால அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக இடம்பெயர்ந்து யாழ். கோண்டாவிலில் வாடகை வீடொன்றில் வசித்து வருகிறார்.
சாதனை மாணவியின் தாயாரான சிவநந்தினி உதயகுமார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட விரிவுரையாளராகக் கடமையாற்றி வருவதுடன், தந்தையாரான நடராஜா உதயகுமார் திறந்த பல்கலைக்கழக பொறியியலாளராகவும் கடமையாற்றி வருகிறார்.
சாதனை மாணவி தனது சாதனை குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்,
நான் இந்த வருடம் புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி 194 புள்ளிகளைப் பெற்று வடமாகாணத்தில் முதலிடம் பெற்றுள்ளேன்.
நான் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை படைப்பதற்கு எனது ஆசிரியை மீனாம்பிகை பரமேஸ்வரனே காரணகர்த்தா ஆவார். அத்துடன் கடவுளின் அருளும் எனக்கு உறுதுணை புரிந்திருக்கிறது. விஞ்ஞானியாகவிருந்தாலும், ஜனாதிபதியாகவிருந்தாலும் ஆசிரியர்களே அவர்களை உருவாக்குகின்றார்கள்.
எனக்குக் கல்வி கற்பித்த ஆசிரியையான மீனாம்பிகை பரமேஸ்வரன் என் போன்ற மாணவர்களுக்குச் சிறந்த முன்மாதிரியாக விளங்குவதால் அவர் போன்று நானுமொரு ஆசிரியையாக உருவாகி மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்க விரும்புகின்றேன்.
பெற்றோரின் ஊக்குவிப்பும், ஆசிரியரின் வழிகாட்டலும், கடவுளின் அனுக்கிரகமும் தான் எனது வெற்றிக்குக் காரணம்.
நான் தனியார் கல்வி நிலையங்கள் எவற்றிற்கும் செல்லவில்லை. ஆசிரியரின் வழிகாட்டலில் தான் இந்தச் சாதனையை நிலைநாட்டியுள்ளேன். வகுப்பாசிரியை எதிர்பார்த்த இலக்கினை அடைய வேண்டுமென்றால் அந்த இலக்கில் நீங்கள் உறுதியாகவிருக்க வேண்டும்.
எனவே, வீட்டில் கல்வி கற்கும் அறையில் புலமைப் பரிசில் பரீட்சையில் நான் 195 புள்ளிகள் பெற வேண்டும் எனவும், பின்னர் 198 புள்ளிகள் பெற வேண்டுமெனவும் எழுதித் தொங்கவிட்டு மீண்டும் மீண்டும் அதனை உச்சரித்து வந்தேன். வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் 194 புள்ளிகள் பெற்றுள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.
ஆசிரியர்களின் வழிகாட்டலுடன் மாணவர்கள் ஒவ்வொருவரும் கல்வி கற்றால் வாழ்க்கையில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைய முடியும் என்றார்.
மாணவியின் சாதனை தொடர்பில் சாதனை மாணவி கல்வி கற்ற யாழ். புனித ஜோன் போஸ்கோ வித்தியாலய அதிபரான அருட்சகோ தரி மேரி ரொஷாந்தியிடம் வினாவிய போது,
எமது பாடசாலையில் 216 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். அவர்களில் 126 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுச் சித்தியடைந்துள்ளனர்.
அந்த வகையில் மாணவியான உதயகுமார் அனந்திகா 194 புள்ளிகள் பெற்று வடமாகாணத்தில் முதலிடத்தையும், அனிருத்தன் மைத்திரேயி யாழ். மாவட்டத்தில் இரண்டாமிடமும் பெற்றுத் தமது பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பாடசாலைக்கும், சமூகத்திற்கும் பெருமை தேடித்தந்துள்ளனர்.
முதலிடம் பெற்ற மாணவியான உதயகுமார் அனந்திகா தனியார் வகுப்புக்கள் எவற்றிற்கும் செல்லாமல் பாடசாலை ஆசிரியையின் கற்பித்தலில் மாத்திரம் கவனம் செலுத்தி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளமை முக்கியமானதானதொரு விடயம். அவர் பெற்ற சிறந்த பெறுபேறு தொடர்பில் நாமனைவரும் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம் என்றார்.
0 comments:
Post a Comment