//]]>

Friday, December 29, 2017

என் பெயரைப் பயன்படுத்தி நன்மை பெற முயற்சி: வடக்கு முதல்வர் குற்றச்சாட்டு

வடக்கு கிழக்கில் உள்ளுராட்சி சபைத் தேர்தல் காலத்தில் என் பெயரை இழுத்து கட்சிகளின் சார்பிலும், தனிப்பட்ட வேட்பாளர்கள் சார்பிலும் நன்மைகளைப் பெற பலர் எத்தனிக்கின்றார்கள் எனத் தெரியவருகின்றது. எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தல் பற்றி நான் எந்தவித முடிவும் எடுக்காமலேயே என்னுடைய சின்னம் பற்றி எல்லாம் கருத்துக்கள் வெளிவந்துள்ளன என வடமாகாண முதலமைச்சர் சி. வி.விக்கினேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் தலைமையை விமர்சித்து கடந்த செவ்வாய்க்கிழமை வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கேள்வி- பதில் அளிக்கை அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து  தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆனந்தசங்கரி தலைமையிலான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் அடுத்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில்
கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.

அவரது கருத்து தமிழ் அரசியலில் முக்கிய பேசுபொருளாக மாறியிருந்த நிலையில் சிவசக்தி ஆனந்தனின் கருத்துக்குப் பதிலளிக்கும் முகமாக அவடமாகான் முதலமைச்சர் நேற்று (28)  அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பாட்டுள்ளதாவது.

நான் ஏற்கனவே எனது கருத்துக்களை வெளியிட்டு விட்டேன். ஊழலற்ற, நேர்மையான, தகைமையுடைய, தமது மக்களை நேசிக்கும் வேட்பாளர்களுக்கு உங்கள் வாக்குகளை அளியுங்கள் என்று கோரியுள்ளேன்.

உள்ளூராட்சியில் கட்சிகள் புகுந்ததால் இதுகாறும் எமது உள்ளூராட்சி மன்றங்கள் பலவிதமான சிக்கல்களை எதிர் நோக்கி வந்துள்ளன.இதேபோன்று தான் முன்னர் அரசியல்வாதிகளும், அரசியலும் புகுந்து எமது கூட்டுறவுச் சங்கங்களை சின்னாபின்னமாக்கி வைத்தன.

நான் இதுவரையில் எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தல் பற்றியோ கட்சி, சின்னம் பற்றியோ இப்போது சிந்திக்கவில்லை.எனது அரசியல் கொள்கைகள் கிட்டத்தட்ட தமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை ஒத்தது என்று ஏற்கனவே கூறியுள்ளேன்.

அத்துடன் அக் கொள்கையானது 2013 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தையு ஒத்தது என்றும் கூறியுள்ளேன்.தமிழ் மக்கள் பேரவையின் கருத்துக்களுடன் ஒத்த கருத்துடையவர்களை நான் மதிக்கின்றேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment