//]]>

Friday, December 29, 2017

என் சுயதேடலே சாதனை வெற்றிக்குக் காரணம்: யாழ். சாதனை மாணவனின் பிரத்தியேகக் கருத்து(Photos)

க. பொ. த உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் பல்வேறு தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பதன் மூலம் நேர விரயத்தைத் தவிர்த்துக் கொள்ள முடியும். பாடசாலையில் அன்றாடம் கற்கும் பாடங்களைத் தினமும் வீட்டில் பொறுமையாகவிருந்து  மீட்டல் செய்வதன் மூலம் சிறந்த பெறுபேறுகளைப் பெற முடியும். நான் பாடசாலைக் கல்வியுடன் தனியார் கல்வி நிலையமொன்றுக்குச் சென்றும் என் உயர்தரக் கல்வியை மேற்கொண்டிருந்தேன். அன்றாடம் கல்லூரியில் கற்கும் பாடங்களைத் தினமும் வீட்டில் மீட்டல் செய்ததுடன் என்னுடைய சுயதேடல் மூலமும் பல்வேறு விடயங்களைக் கற்றிருந்தேன். இதுவே என் சாதனை வெற்றிக்கு காரணமாக அமைந்தது என க. பொ. த உயர்தர பௌதீக விஞ்ஞானப் பிரிவில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்த யாழ். பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் சிறிதரன் துவாரகன் தெரிவித்துள்ளார். எனது எதிர்கால இலட்சியம் பொறியியலாளராக உருவாகி நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டுமென்பதேயாகும். இதற்காக விடா முயற்சியுடன் செயற்படுவேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் நேற்று வியாழக்கிழமை(28) அதிகாலை இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையில் யாழ். பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் சிறிதரன் துவாரகன் பெளதீக விஞ்ஞானப் பிரிவில் தேசிய ரீதியில்  முதலிடம் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.

அவரது சாதனை தொடர்பில் குடும்பத்தினர், கல்லூரிச் சமூகத்தினர் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் சாதனை மாணவன் தனது பெறுபேறு தொடர்பிலும் வெற்றிக்கு காரணமாக அமைந்த விடயங்கள் தொடர்பிலும் எமது செய்தச் சேவைக்குப் பிரத்தியேகமாகக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் யாழ். புற்றளை வித்தியாலயத்தில் என்னுடைய ஆரம்பக் கல்வியை மேற்கொண்டு தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தேன். புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த காரணத்தால் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரிக்குத் தெரிவானேன். இந்தக் கல்லூரியில் கல்வி பயின்று க.பொ. த சாதாரண தரத்தில் சித்தியடைந்த நான் க. பொ. த உயர்தரத்தில் கணித- விஞ்ஞானப் பிரிவில் இணைந்து கல்வி கற்றேன். இந்தத் துறையில் நான் கொண்டிருந்த ஆர்வத்தினால் ஊக்கத்துடன் கல்வி கற்றுத் தற்போது தேசிய நிலையில் முதல் மாணவனாகத் தெரிவாகும் நிலையை அடைந்துள்ளேன். இது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

நான் சிறந்த பெறுபேறு பெறுவதற்குக் காரணமான எங்களுடைய கல்லூரியின் அதிபர், கற்பித்த ஆசிரியர்கள், எனது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

சாதனை மாணவனின் பெற்றோர்களின் பார்வையில்......

ஐந்தாம் தரப் புலமைப் பரீட்சைக்கு எம்முடைய மகன் தோற்றிய போது நாங்கள் கூடுதல் கவனம் செலுத்தவில்லை. அவர் இயல்பாகக் கற்று புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்திருந்தார். ஐந்தாம் தரம் வரை அவரது கற்றல் தொடர்பில் நாங்கள் கட்டுப்பாடுகள்  எதுவும் விதிக்கவில்லை.
ஆனால், அவருடைய ஆறாம் தரத்திலிருந்து பெற்றோர் என்ற வகையில் அவரது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இரவு-07 மணி முதல் 09 மணி வரை கல்வி கற்க வேண்டுமென அறிவுரை வழங்கினோம். அதனை ஏற்று அவர் செயற்பட்டிருந்தார். இந்நிலையில் பத்தாம் தரம் முதல் நாங்கள் எதுவும் சொல்லாமலேயே தானாக வீட்டில் கற்கும் வழக்கத்தை மகன் கொண்டிருந்தார்.
சிறுவயது முதல்  எங்களுடைய மகன் கல்வியில் ஆர்வம் கொண்டிருந்தார். வளர்ந்த பின்னர்  கூடுதலான நேரத்தை அவர் தன் கல்வி மீது செலுத்தியுள்ளார். இதன் மூலம்  கடும் போட்டியான கல்விச் சூழலில் பெளதீக விஞ்ஞானப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளமை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அவர் தன் வாழ்வில் மேலும் பல சாதனைகளைப் படைக்க வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றோம் என்றனர்.

(தொகுப்பு:- செல்வநாயகம் ரவிசாந்-)


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment