//]]>

Monday, January 29, 2018

ஊரெழு விபத்தும் ஊருக்கு உபதேசிக்கவில்லை!:உள்ளம் வெதும்பும் யாழ். ஓய்வுநிலை அதிபர்(Video)

யாழ். ஊரெழு பலாலி பிரதான வீதியில் கடந்த வாரம் மோட்டார்ச் சைக்கிளும், சிறியரக ஹன்ரரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான கோரவிபத்தில் இரு இளைஞர்கள் பல மீற்றர் தூரம் தூக்கி வீசப்பட்ட நிலையில் மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்திச் சென்ற குப்பிளான் இளைஞன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்ததுடன் மோட்டார்ச் சைக்கிளின் பின்னாலிருந்து பயணித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சம்பவ தினம் இரவே உயிரிழந்திருந்தார். 

அதிகரித்த வேகமும், கவனயீனமான முறையில் மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்திச் சென்றமையுமே மேற்படி விபத்துக்கான காரணமெனத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் எமது செய்திச் சேவை தொடர் செய்திகளை வெளியிட்டிருந்தமையும் பலரும் அறிந்ததே.

இந் நிலையில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்ற அதேபகுதியில் வசித்து வரும் ஓய்வு நிலை அதிபரும், பிரபல இசைச் சொற்பொழிவாளருமான கவிமணி அன்னைதாஸன் குறித்த சம்பவம் தொடர்பில் தனது ஆழ்ந்த கவலையையும், ஆதங்கத்தையும் வெளியிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தின் பாதிப்பினால் மிகுந்த மனம் வெதும்பிய அவர் எமது இளைஞர், யுவதிகளுக்கு அறிவுரை சொல்லும் வகையில் கவிதையொன்றையும் எழுதியுள்ளார்.

குறித்த சம்பவத்தின் எதிரொலியாக அவர்  எமது செய்திச் சேவைக்கு விசேடமாக வழங்கிய கருத்துப் பகிர்வு இது!

ஊரெழுப் பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அந்தத் துயர சம்பவத்தை நான் நேரில் அவதானிக்கவில்லை. ஆனால், அந்தச் சம்பவம் இடம்பெற்ற பின்னர் அந்தச் சூழலை நேரில் அவதானித்த போது எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.

நாங்கள் போரிட்ட வேளை அழிந்தமை காலத்தின் கட்டாயம் என்று கருதலாம்.  ஆனால்,தற்போது ஊடகங்களைப் பார்க்கும் போது மிகுந்த வேதனை  தருகிறது. போருக்குப் பின்னர் எம் இளைஞர்கள் வீணாகப் பலியாவதைப் பார்த்து ஓய்வு பெற்ற அதிபரென்ற வகையில் என்னால் வருந்தாமலிருக்க  முடியவில்லை. எனவே, 'Jaffna vision' ஊடாக எமது மக்களுக்கு ஒரு செய்தியைச் சொல்ல வேண்டிய கடப்பாடு எனக்குண்டு.

என் இளசுகளே! நீங்கள் பறக்கின்றீர்கள். நான் கல்வி புகட்டும் போதும் பல தடவைகள் சொல்லியிருக்கின்றேன். இது மோட்டார்ச் சைக்கிளல்ல...மோட்டுச் சைக்கிள். இந்த மோட்டுச் சைக்கிளை நீங்கள் பயன்படுத்துவதற்கேற்ற விதத்தில் பயன்படுத்தினால் அது மோட்டார்ச் சைக்கிள் தான். ஆனால், பல இளைஞர்கள் மோட்டார்ச் சைக்கிளை ஒரு மோட்டுச் சைக்கிளாகவே கருதிச் செயற்பட்டு வருகின்றனர்.

என்னுடைய வீடு ஊரெழுவில் பலாலி வீதிக்கு அருகில்  அமைந்துள்ளது.பலாலி வீதி அகன்ற காப்பெற் வீதியாகவுள்ளது. இந்த வீதியில் இளைஞர்கள் பறக்கிறார்கள்.

நாங்கள் எங்களுடைய இளம் பருவத்தில் ஒரு சைக்கிள் வாங்குவதற்கே பட்ட பாடு என்னையொத்த வயதினருக்கு நன்கு  தெரியும். ஆனால்,தற்போது துவிச்சக்கர வண்டிக்குப் பதிலாக ஒரு வீட்டிலேயே இரண்டு அல்லது மூன்று மோட்டார்ச் சைக்கிள்கள் காணப்படுகின்றன. பல்வேறு வகையான வியாபாரக் குறியியீடுகளுடன் கூடிய மோட்டார்ச் சைக்கிள்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன.

குறிப்பாக வீதிகளில் பெண் பிள்ளைகள் மோட்டார்ச் சைக்கிளை மெதுவாகச் செலுத்திச் சென்றமையை நான் காணவே இல்லை. நான் உண்மையைத் தான் ஐயா! சொல்கிறேன். கடவுளே! பெண்பிள்ளைகள் போகிற வேகம்....அதனை விட இளைஞர்கள் செல்கிற வேகத்தைப் பார்க்கும் போது மனம் வெதும்புகிறது.

பொலிஸார் இளைஞர்களை ஹெல்மெட் அணிய வைக்கப் படும் பாடுகள் எத்தனை?, ஹெல்மெட் அணிந்து பயணிக்காமையால் தண்டனை வழங்குகிறார்கள். ஆனால், அவ்வாறான தண்டனைகள் மூலமாவது சட்டதிட்டங்களை நாம் உரிய வகையில் மதிக்கிறோமா?, இல்லையே! ஏன்?

ஊரெழுவில் நடந்த கொடூர விபத்துச் சம்பவம் என் மனதை வெகுவாகப் பாதித்தமையால் என்னை ஒரு கவிதை எழுதுவதற்குத் தூண்டியுள்ளது. அந்தக் கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.

போரிட்ட வேளை பலியானார் எம்மக்கள்
தவிர்த்திட முடியாதது காலத்தின் கட்டாயமும்
சிலிர்த்திட வைக்குதிங்கே  தினம் தினம் அவலச் சாவு
ஊரெழுவில் நடந்த இந்த விபத்து
ஊருக்கு உபதேசிக்குமென்று தான் நம்பினேன்
நாம் தோற்றுப் போனோம்!

நேற்றும் அவ்விடத்தில் காளையும் காரிகையும்
கடுகதியில் பறந்தார் ஐயா!
பார்த்தவர் பரிதவித்தார்
பகர்ந்தாலும் கேட்க மாட்டார்!

எத்தனை வேகத்துடன் எங்கு நீர் சென்றாலும்
மிச்சப்படுத்துவதோ ஐந்து பத்து நிமிடங்கள் தான்!
அத்தகு வேகம் உம்மை மட்டுமல்ல
அடுத்தவரையும் கெடுத்துப் பலியாதல் மட்டுமல்ல....
ஊனமாக்கி விடுவதையும்
ஏன் உணர மறுக்கிறீர்கள்!

எம்மரும் இளைஞர்களே!
இது மோட்டார்ச் சைக்கிளல்ல....
மோட்டுச் சைக்கிள் வேகத்தைக் கூட்டுவோருக்கு
விவேகத்தை வளர்த்து வேகத்தைக் குறைப்பீரானால்
வேதனை இல்லை கண்டீர்!
வீண் கதை ஈதன்று!

பழசொன்று சொல்கிறதென்று இளசுகளே பரிகாசித்தால்
பாழ்பட்டுப் போவீர்...
உங்கள் ஊழ் இதுவென்றே சொல்வேன்
வேறு என்ன செய்ய முடியும்?

அன்பான இளைஞர்களே! மோட்டார்ச் சைக்கிளில் ஏறும் போது உங்களை நிதானப்படுத்துங்கள். வேகத்தை விவேகமானமுறையில் பயன்படுத்தி  ஏனையவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் நீங்கள் பயணிப்பதுடன் ஏனையவர்களுக்கும் உரிய வழி விட்டுப் பயணியுங்கள். இதன் மூலம் உங்கள் வாழ்க்கையை வசந்தமுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள் என்றார் .

(நேர்கண்டவர் மற்றும் காணொளி:- செல்வநாயகம் ரவிசாந்-)


























.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment