நாங்கள் இந்திய வல்லரசுடன் நெருங்கிய உறவுகளைப் பேணி வருவது யதார்த்த பூர்வமானது. அதற்கு உள்ளர்த்தங்கள் கற்பிக்கப்படுவது நகைப்பிற்குரியது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்தியத் துணைத் தூதுவர் அ. நடராஜனுக்கு நேற்றைய தினம்(04) வடக்கு மாகாணசபையின் சார்பில் நடாத்தப்பட்ட பிரிவு உபசார நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த மாதம்-25 ஆம் திகதி இந்தியத் துணைத் தூதுவர் ஆ.நட்ராஜனின் பிரிவுபசார நிகழ்வில் யாழ். மக்கள் சார்பாக வாளொன்றை ஞாபகார்த்தப் பரிசிலாக வழங்கியிருந்தமைக்கு வேறுபட்ட விதமாக அர்த்தம் வழங்கப்பட்டுள்ளது.
கம்பர் உரை எழுதாமையால் தமிழறிஞர்கள் எவ்வாறு தமது திறமைகளைத் தாம் எழுதிய உரைகளின் வாயிலாக வெளிப்படுத்தினார்களோ அதேபோன்று எமது ஊடகவியலாளர்களும் மாசி 25 ஆம் திகதி முதல் இன்று வரை விதம் விதமான கற்பனை வளத்துடன் அன்று கையளித்த வாளுக்கான குறியீட்டுச் செய்திகளை வெளியிட்டு வருகின்றார்கள்.
அதுமட்டுமன்றி எனது அரசியற் போக்கு இந்தியாவுடன் நெருங்கிய உறவுகளைப் பேணக்கூடிய விதத்தில் அமைந்திருக்கின்றன. அதில்,அரசியல் ரீதியான உள்ளர்த்தங்கள் இருப்பதாகவும் கூறி வருகின்றார்கள்.
உதாரணத்திற்கு வடக்கு, கிழக்கு இணைந்த சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வொன்றை ஏற்படுத்துவதில் இந்தியாவின் முக்கியத்துவம் தொடர்பிலும், இந்தியாவுக்கிருக்கின்ற தார்மீகக் கடமை பற்றியும் நான் வலியுறுத்தி வருவதை அடிப்படையாகக் கொண்டு நான் இந்தியாவிடம் அடிபணிந்து விட்டதாக சில பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாங்கள் எமது அண்டை நாடான இந்திய வல்லரசுடன் நெருங்கிய உறவுகளைப் பேணி வருவது யதார்த்த பூர்வமானது. அதற்கு உள்ளர்த்தங்கள் கற்பிக்கப்படுவது நகைப்பிற்குரியது.
எமக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான தொடர்புகள், எமது பிரச்சினையில் கடந்த நான்கு தசாப்தங்களாக இந்தியா ஏற்படுத்தியுள்ள பல்வேறு மட்டங்களிலான தலையீடுகள், மற்றும் இன்றைய பூகோள அரசியலில் இந்தியாவுக்கு இருக்கின்ற முக்கியத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கான சுய நிர்ணய உரிமையினை பெற்றுக்கொள்ளும் எமது முயற்சிகளில் இந்தியாவுடனான நட்பு,மேலும் நேர்மையுடனும் இதயசுத்தியுடனுமான பரஸ்பர அரசியல் ராஜதந்திர நடவடிக்கைகள் ஆகியன அவசியமானவை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
0 comments:
Post a Comment