//]]>

Sunday, March 4, 2018

ஆலயங்கள் மீதான தாக்குதல்!:செஞ்சொற்செல்வர் வடக்கு முதல்வரிடம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்(Video)

தற்போது யாரும் எதிர்பாராத வகையில் சைவசமயத்தவர்களை மனம் நோகச் செய்கின்ற வகையில் மன்னார் மாவட்டத்தில் ஆலயங்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளமை வன்மையான கண்டனத்துக்குரியது. வடக்கு மாகாண முதலமைச்சர் இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளரும்,சிவபூமி அறக்கட்டளையின் தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
a
வடக்கின் சைவ ஆலயங்கள் தாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தக் கோரி அகில இலங்கை சைவமகாசபையின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை(04) யாழ்.நல்லூரில் கவனயீர்ப்புப் பேரணியொன்று நடைபெற்றது. கவனயீர்ப்புப் பேரணி ஆரம்பமாகி  நல்லூர் கோயில் வீதி வழியாகப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கைலாசபிள்ளையார் ஆலயத்தைச் சென்றடைந்ததைத் தொடர்ந்து அங்கு வடக்கின் சைவ ஆலயங்கள் தாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி விசேட ஒன்றுகூடலொன்றும் நடைபெற்றது.

அங்கு கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இந்தச் சம்பவம் இடம்பெற்ற பின்னர் இத்தனை நாட்களாக நாங்கள் காத்திருக்கின்றோம். எதிர்காலத்தில் இப்படியான சம்பவங்கள் நடைபெறாமலிருப்பதற்கு எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகளுக்காகச் சைவமக்கள் காத்து நிற்கின்றார்கள்.

இனிமேல் இவ்வாறானதொரு சம்பவம் நடைபெறாமலிருப்பதற்கு மக்கள் பிரதிநிதிகள் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென எமது சைவமக்கள் சார்பாகத் தாழ்மையாக வேண்டிக் கொள்கின்றேன்.

அதுமட்டுமன்றிப் போர்ச் சூழலைக் காரணம் காட்டிப் பல மக்கள் மதம் மாற்றப்பட்டார்கள். தற்போது போர் ஓய்ந்த பின்னரும் எங்கள் சமூகத்தில் மதமாற்றும் முயற்சிகள் வலுப் பெற்று வருகிறது.  இவற்றையெல்லாம் சைவமக்கள் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றார்கள். வீணான பிரச்சினைகள் அதிகரித்துவிடக் கூடாது என்பதற்காகச் சைவமக்கள், சைவநிறுவனங்கள் சில வேளைகளில் அமைதி காத்தாலும் சைவமக்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தும் விடயங்கள் மிக மிக வேதனைக்குரியவை. எனவே, இவற்றிற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகின்றேன்.

21 ஆம் நூற்றாண்டில் மனிதர்கள் மனிதர்களைப் புரிந்து கொண்டு வாழவேண்டுமென உலகம் எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்ற வேளையில் சுதேசிகளுக்குச் சொந்தமான சமயத்தின் தொன்மைச் சின்னங்களை அழிப்பது மிக மிக மன வருத்தத்துக்குரியது.

1505 ஆம் ஆண்டு இந்த நாட்டில் அந்நியர் வந்த நாள் தொடக்கம் சைவசமய ஆலயங்களை அழிப்பதுவும், சைவசமய அடையாளங்களை அழிப்பதுவும், மதம் மாற்றுவதுவும் எங்களுடைய சமூகத்திலொரு தீராத நோயாகத் தொற்றிக் கொண்டது.

நல்லைநகர் நாவலர் பெருமான் பிறந்த இந்தக் கைலாசபிள்ளையார் ஆலயச் சூழலில் நாவலர் பெருமான் எடுத்த கடின முயற்சியின் பலனாக மீண்டும் சைவ ஆலயங்கள் இந்த நாட்டிலே எழுச்சி பெற்றது. மதம் மாறியவர்கள் பலரும் மீண்டும் தங்களுடைய தாய்மதமான சைவசமயத்திற்கு மீளவும் திரும்பியதுடன் சைவசமயத்தைக் காப்பாற்றினார்கள்.

இந்நிலையில் தற்போது சைவசமயத்திற்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் சில செயற்பாடுகள் வேதனைகளைத் தந்தாலும் பன்னெடுங்காலமாக நிலைபெற்றிருக்கின்ற சைவசமயத்தை எவர் நினைத்தாலும் அழித்துவிட முடியாது என்பது தான் பரிபூரணமான உண்மை.

(எஸ்.ரவி-)







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment