யாழ்.குப்பிளான் குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையத்தில் கடந்த பல நாட்களாக பத்திரிகைகள் இல்லாமையால் தினமும் வாசகர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிச் செல்வதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி சனசமூக நிலையத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் சில பத்திரிகைகள் வாசகர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு வந்த போதும் கடந்த பல நாட்களாகப் பார்வைக்காக வைக்கப்படுவதில்லை என விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சனசமூக நிலையம் குப்பிளான் வீரமனை கன்னிமார் கெளரியம்பாள் ஆலயத்திற்கருகில் அழகிய இயற்கைச் சூழல் மத்தியில் அமைந்துள்ளது.
குப்பிளான் தெற்கில் இந்தச் சனசமூக நிலையம் கடந்த காலங்களில் சிறப்பாக இயங்கி வந்த போதும் தற்போதைய நிர்வாகத்தின் செயற்திறனற்ற செயற்பாடுகள் காரணமாக பத்திரிகைகள் வாசகர்களின் பார்வைக்கு வைக்கப்படுவது பல நாடகளாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், குறித்த சனசமூக நிலையத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த மாதாந்த இதழ் மற்றும் பழைய பத்திரிகைகள் விஷமிகளால தூக்கிவீசப்பட்ட நிலையில் காணப்படுவதுடன் சனசமூக நிலையம் துப்பரவின்றி குப்பைகள் சூழ்ந்தும்,தூசிகள் படர்ந்தும் காணப்படுகின்றது.
கல்வி, கலை,பண்பாட்டுக்குப் பெயர் போன குப்பிளான் மண்ணில் இயங்குகின்றதொரு சனசமூக நிலையம் கைவிடப்பட்ட நிலையில் கவனிப்பாரின்றிக் காணப்படுவது எமது செய்திச் சேவையின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இது மிகவும் வேதனைக்குரியதொரு செய்தி. சனசமூக நிலையம் ஒரு அறிவுத் திருக்கோயில் என்பதனை அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டியது அவசியம் என்பதனைப் பொறுப்புள்ளதொரு ஊடகமென்ற வகையில் சுட்டிக் காட்டுகின்றோம்.
இந்நிலையில் இது தொடர்பில் பொறுப்புவாய்ந்தவர்கள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுப்பதுடன், மேற்படி சனசமூக நிலையத்தின் நிர்வாகத்தை மறுசீரமைப்பது காலத்தின் தேவையென்பதையும் சம்பந்தப்பட்டவர்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.
(நேரடி ரிப்போர்ட்:- எஸ்.ரவி-)
0 comments:
Post a Comment