//]]>

Wednesday, December 7, 2016

“தமிழ்மக்கள் இறைமை கோரவில்லை” எனக் கூறுவதற்கும் ஆணை தந்தார்களா?- சி.அ ஜோதிலிங்கம்


கடந்தவாரங்களில் தமிழரசியலில் மூன்று விடயங்கள் முக்கியத்துவம் பெற்றன.  ஒன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் “தமிழ்மக்கள் இறைமையைக் கோரவில்லை” என ஆற்றிய உரை, இரண்டாவது மட்டக்களப்பில் பௌத்த பிக்குகளினால் ஏற்படுத்தப்பட்ட பதற்றம், மூன்றாவது விடுதலைப்புலிகளின் முன்னாள் கிழக்குத் தளபதி கருணா கைதுசெய்யப்பட்டமை. என்பனவே அவையாகும்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்தரன் வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு பற்றிய விவாதத்தின்போது தாம் தமிழ்மக்களுக்கு இறைமையைக் கோரவில்லை எனக் கூறியிருக்கின்றார். இது தமிழ் மக்களின் நீண்ட அரசியல் அபிலாசைகளையும், இதுவரைகால தியாகம் நிறைந்த போராட்டத்தையும் கொச்சைப்படுத்துகின்ற கூற்றாகும். தமிழ் மக்கள் தேர்தல் மூலம் வழங்கிய ஆணையை மீறி அவருக்கு இந்த உரிமையைக் கொடுத்தது யார்? என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது.

தமிழ்தேசிய கூட்டமைப்பு இதுவரை காலமும் பகிரப்பட்ட இறைமையின் அடிப்படையிலேயே அரசியல் தீர்வைக் கோருகின்றோம் எனக் கூறி வந்தது. சம்பந்தன் இதனைப் பல தடவைகள் கூறியிருக்கின்றனர். அதுவே உண்மையில் தவறானது. இறைமை தமிழ்மக்களுக்கு பிறப்புரிமையாக உள்ளது. இங்கு தமிழ் மக்களின் இறைமை தமிழ்மக்களிடம் உள்ளது. சிங்கள மக்களின் இறைமை சிங்கள மக்களிடம் உள்ளது. இரண்டையும் கூட்டி சமஷ்டி பொறிமுறைக்குள் இலங்கை என்ற நாட்டை உருவாக்குவது என்பதே கோட்பாட்டு ரீதியாக சரியானதாகும். இதனால் பகிரப்பட்ட இறைமைக்கு பதிலாக கூட்டு இறைமை என்பதையே கோரிக்கை வைத்திருக்கவேண்டும்.

பகிரப்பட்ட இறைமை எனக் கூறுவதன் ஆபத்து இறைமை தமிழ் மக்களிடம் இல்லை அது சிங்கள மக்களிடமே இருக்கின்றது. அது தமிழ் மக்களுக்கும் பகிரப்படல் வேண்டும் எனக் கேட்பதாகும். இது தமிழ்மக்கள் ஒரு தனியான தேசம் என்பதைப் புறக்கணிப்பதோடு பிறப்பாகவே இருக்கும் இறைமையையும்  உதாசீனம் செய்கின்றது. அத்துடன் இறைமையை பகிர்ந்தவர்கள் அதனை மீளப்பெறும் ஆபத்தையும் உருவாக்குகின்றது.

தற்போது இந்த பகிரப்பட்ட இறைமை என்ற கொள்கையையும் கூட்டமைப்பு கைவிட்டுள்ளது. ஆனால் சமஷ்டியைக் கோருவதாக மீண்டும் மீண்டும் கூறுகின்றது. சமஷ்டி ஆட்சி என்றாலே இறைமையைப் பகிர்வதுதான். அரசின் இறைமை அதிகாரத்தை மத்திய அரசிற்கும் பிராந்திய அரசுகக்குமிடையே பகிர்ந்து கொள்ளும் ஒரு ஆட்சி முறையே சமஷ்டி ஆட்சிமுறையாகும். மெத்தப் படித்த சுமந்திரனுக்கு இவையெல்லாம் தெரியாததல்ல. சுமந்திரன் இவற்றை மறைப்பதன்மூலம் ஒற்றையாட்சி முறைக்கு தாம் தயார் என்பதை வெளிப்படையாகவே கூறுகின்றார். அதுவும் தமிழ்மக்களுக்கான அரசியல் நியாயப்பாடுகளை முன்வைக்கக்கூடிய உயர்சபையில் சர்வதேச சமூகம் கவனத்தைக் குவித்திருக்கின்ற வெளிநாட்டு அமைச்சிற்கான விவாதத்தின்போது இதனை கூறியுள்ளார்.

புதிய அரசியல்யாப்பில் ஒற்றையாட்சி முறை நீக்கப்படப்போவதில்லை. வட – கிழக்கு இணைக்கப்படப்போவதில்லை. மாகாணசபைகளுக்கு அதிகாரம் இருப்பது போன்ற ஒரு தோற்றமே கொடுக்கப்படப்போகின்றது. ஊடகச் செய்திகளின்படி இது உறுதியாகிவிட்டது. முன்னைய கட்டுரைகளிலும் இது பற்றி கூறப்பட்டுள்ளது. சுமந்திரன் இதனை தற்போது சிங்கள மக்கள் மத்தயிலும் தமிழ்மக்கள் மத்தியிலும் விற்க முற்படுகின்றார்.

“வட – கிழக்கு இணைப்பு தற்போதைக்கு சாத்தியமில்லை” என்றும் சுமந்திரன் கூறியிருக்கின்றார். இது இப்போதல்ல நீண்டகாலமாகவே சுமந்திரன் கூறிவருகின்ற ஒன்றுதான். இங்கு மட்டுமல்ல தமிழ் நாட்டிலும் இதனைக் கூறியிருக்கின்றார். இதற்கு அவர் கூறிய விளக்கம் “தமிழ் மக்கள் கிழக்கில் சிறுபான்மையாக உள்ளனர்” என்பதே! இதனை செவிமடுத்த தமிழகத்தின் மூத்த போராளி தியாகு தமிழ் மக்கள் “கிழக்கில் சிறுபான்மையா? சிறுபான்மையாக்கப்பட்டவரா? எனப் பதில் கேள்வி கேட்டபோது சுமந்திரன் பதில் ஒன்றையும் கூறவில்லை. இதனை தோழர் தியாகு இப் பத்தியாளரிடம் நேரடியாகவே கூறியிருந்தார்.

சுமந்திரன் இதற்கு கூறிய விளக்கம் “முஸ்லீம் மக்கள் கடந்தகால அனுபவத்தின் அடிப்படையில் இணைப்பை ஏற்றுக்கொள்ளகின்றார்கள் இல்லை” என்பதே. இங்கு முஸ்லீம் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது இரண்டாம் பட்சமான விடயம். தமிழ் மக்களுக்கு இது அவசியமா? அவசியமில்லையா என்பதுதான் முதலாம்பட்சமான விடயம்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை வட – கிழக்கு இணைக்கப்படல்வேண்டும் என்பதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் முதலாவது தமிழ் மக்கள் வட – கிழக்கு இணைப்பு இல்லாமல் கூட்டிருப்பு, கூட்டுரிமை, கூட்டடையாளம் என்பவற்றை ஒரு போதும் பேணமுடியாது. இவற்றைப் பேணாமல் தனியான ஒரு தேசமாக எழுந்து நிற்கமுடியாது. தமிழ் மக்கள் ஒரு தனியான தேசம் என்பதை சிதைப்பதற்காகத்தான் கிழக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை அதுவும் இணைப்பின் மையமாக இருக்கின்ற திருக்கோணமலையில் உருவாக்கினர்.

இரண்டாவது வட – கிழக்கு இணைந்த தாயகம் என்பதற்கு தமிழ்மக்கள் இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே ஆணையை வழங்கிவந்தனர். அதற்காகவே இரத்தம் சிந்திய போராட்டத்தையும் நடாத்தினர். வடக்கு மட்டும் தான் என்றால் சிங்கள அரசு எப்போதோ பிரச்சினையைத் தீர்த்திருக்கும். இந்த ஆணையை மீறுவதற்கு எவருக்கும் உரிமை கிடையாது.

மூன்றாவது கிழக்கு தமிழ் மக்கள் இன்று மிகவும் பலவீனமாகியுள்ளனர். திருக்கோணமலையும், அம்பாறையும் மிகவும் பலவீனமாகிவிட்டது. மட்டக்களப்பு தான் ஓரளவு பலமானநிலையில் உள்ளது. ஒரு பக்கத்தில் சிங்கள ஆதிக்கத்திற்கும், மறுபக்கத்தில் முஸ்லீம் ஆதிக்கத்திற்கும் முகம்கொடுக்க வேண்டியுள்ளது. திருக்கோணமலையை சிங்கள ஆக்கிரமிப்பு பலவீனப்படுத்துகின்றது. அம்பாறை மாவட்டத்தை முஸ்லீம் ஆக்கிரமிப்பு பலவீனப்படுத்துகின்றது. இந்நிலையில் கிழக்கு தமிழ் மக்களினால் தனித்து தமது இருப்பினைப் பேணமுடியாது வடக்குடன் இணைந்திருப்பதன்மூலமே இருப்பினை பாதுகாக்கமுடியும்.

நான்காவது விடுதலைப்போராட்டத்தில் கிழக்குத் தமிழ்மக்களின் பங்ளிப்பு என்பது அபாரமானது. படையினரால் மட்டுமல்ல முஸ்லீம்களினாலும் கூட்டம் கூட்டமாக அவர்கள் கொலை செய்யப்பட்டனர். இவ்வளவு பாதிப்புகளின் பின்னர்கூட தமிழ்த்தேசியத்துடன் கிழக்கு மக்களே உறுதியாக உள்ளனர். வடக்கில் தமிழ்த்தேசியத்திற்கு எதிரான டக்ளஸ் தேவானந்தாவும், விஜயகலா மகேஸ்வரனும் தெரிவுசெய்யப்பட்டனர். ஆனால் கிழக்கு மக்கள் அவ்வாறான நிலைக்கு இடம்கொடுக்கவில்லை. இந்நிலையில் விடுதலைப்போராட்டத்தின் அறுவடையை வடக்கு மக்கள் மட்டும் பெற்றுக்கொள்வது நன்றி கெட்டதனமானது. இதனை வரலாறு ஒரு போதும் மன்னிக்காது.

வடக்கு – கிழக்கு இணைப்பை முஸ்லீம் மக்கள் ஆதரிக்கவில்லை என்பது உண்மை தான். வடக்கு – கிழக்கு பிரிந்திருக்கும் போது அவர்களின் பேரம் பேசும் அதிகமானது என்பதாலும், சிங்கள மக்களின் எதிர்ப்பு வரும் என்பதாலும் அவர்களை பின்னடிக்கின்றனர். இது விடயத்தில் வடக்கு – கிழக்கு இணைப்பின் மூலம் முஸ்லீம்களின் தனித்துவமும் சுயாட்சியும் பேணப்படும் என்பதை உத்தரவாதப்படுத்தி முறையான பேச்சுவார்த்தைகள் அவர்களுடன் நடாத்தப்பட்டதா? இங்கும் அரசியல்வாதிகளுடன் மட்டுமல்ல முஸ்லீம் சிவில் சமூகத்துடனும் பேச்சுவார்த்தை நடாத்தியிருக்கவேண்டும். அவை எதனையும் செய்யாது விட்டுவிட்டு இணைப்பு சாத்தியமில்லை எனக் கூறுவதில் என்ன தார்மீக நியாயம் இருக்கின்றது.

சரி முஸ்லீம் மக்கள் ஏற்கவில்லை என வைத்துக்கொள்வோம். தமிழ்மக்களுக்கு இது அவசியமாக இருப்பதனால் மாற்றுவழிகளைத்தேடவேண்டாமா? இந்த மாற்றுவழி என்பது கிழக்கின் தமிழ்ப் பிரதேசங்களை நிலத் தொடர்ச்சியற்ற வகையிலாவது வடக்குடன் இணைத்தலே! இதற்கு உலகில் பல உதாரணங்கள் உண்டு. இந்தக் கோரிக்கைகளை ஏன் முன்வைக்கமுடியாது? இதனை முன்வைத்தால் முஸ்லீம்கள் கூட கீழ் இறங்கிவரக்கூடும். ஏனெனில் கிழக்கில்  ஒருபோதும் முஸ்லீம்களினால் தனித்து இருப்பினைப் பேணமுடியாது. முஸ்லீம் தேசியம் ஒரு சார்பு நிலைத்தேசியமே தவிர சுயாதீனத் தேசியம் அல்ல.

இங்கு யதார்த்தம் பற்றியும் பேசப்படுகின்றது. இலக்கிற்கும் யதார்த்தத்திற்கும் இடையில் எப்போதும் இடைவெளி இருக்கும் தான். அதனை நிரப்புவது தான் அரசியல். அதற்குத் தான் தலைமை வேண்டும். அந்தத் தலைமை இலக்கிற்கு சார்பாக யதார்த்தத்தை வளைக்கும் ஆற்றலைக் கொண்டதாக இருக்கவேண்டும். யதார்த்த்திற்கு பின்னால் இழுபட்டுச் செல்வதற்கு ஒரு தலைiமை தேவையில்லை. அது அடிமைக் கூட்டங்கள் செய்கின்றவேலை.

சுமந்திரன் பொறுப்பற்ற விதத்தில் தமிழ்த்தேசியத்தின் அடிப்படைகளை இல்லாமலாக்க முற்படுகின்றார். தமிழ் மக்கள் எவ்வளவு காலத்திற்கு இதனைப் பார்த்துக்கொண்டிருக்கப்போகின்றனர்?

இனி இரண்டாவது விடயத்திற்கு வருவோம். மட்டக்களப்பு நகரில் உள்ள மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமங்கலரத்னதேரர் அண்மைக் காலமாக தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றார். அரசாங்க அதிபரின் கட்டளையை மீறி சிங்களக்குடியேற்றங்களை அமைத்தல், தனியார் காணிகளில் புத்தர் சிலைகளை அமைத்தல் போன்றவற்றில் ஈடுபட்டுவந்தார். இதன் உச்சநிலையாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழ் அரச ஊழியர் ஒருவரை தகாதவார்த்தைகளினால் எச்சரித்திருந்தார். இது அங்கு வாழும் தமிழ்மக்களை மிகவும் கோபப்படுத்தியது. அவர்கள் மட்டக்களப்பில் பல இடங்களிலும் தேரருக்குகெதிரான போராட்டங்களை நடாத்தினர்.

இந்நிலையில் சுமங்கலரத்தினதேரருக்கு ஆதரவாக பொதுபலசேன உட்பட பல பௌத்த அமைப்புக்கள் களத்தில் இறங்கின. பொதுபலசேனவின் தலைவர் ஞானசாரதேரர் தலைமையில் மட்டக்களப்பு நோக்கி வாகனப் பவனி இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட எல்லைக் கிராமமான ரிதிதென்னவில் வைத்து இப்பவனி பொலிஸாரால் மறிக்கப்பட்டது. ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ஆதம்லெப்பையினால் விடுக்கப்பட்ட தடையுத்தரவு தலைமைவகித்த ஞானசாரதேரரிடம் வழங்கப்பட்டது. அவர் அதனை கிழித்தெறிந்துவிட்டு பவனியைத் தொடரமுற்பட்டார். பொலிஸார் மறித்தனர். ஆர்பாட்டக்காரர்கள் வீதிப்போக்குவரத்தையும், ரயில் போக்குவரத்தையும் மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்  எனினும் படையினர் பயணத்தை தொடர்வதற்கு அனுமதிக்கவில்லை.

“தடை உத்தரவினைத் தருவதாயின் வரக்காப்பொலையிலோ, குருநாகலிலோ தம்புள்ளையிலோ தந்திருக்கலாம் தானே”. ஏன் இவ்வளவு தூரம் வந்தபின் மறிக்கின்றீர்கள் என ஞானசாரதேரர் வாதிட்டார். உண்மையில் அங்குள்ள நீதிமன்றங்களில் பொலீசார் தடையுத்தரவினைக் கேட்டாலும் கிடைத்திருக்குமோ என்பது சந்தேகம் தான்.

ஏற்கனவே மகிந்தரின் கண்டியிலிருந்துதான் கொழும்பு யாத்திரைக்கு தடையுத்தரவு கொடுக்க பல நீதிமன்றங்கள் மறுத்திருந்தன. சிங்கள நீதிபதிகள் இதற்கு தயாராக இருப்பர் எனவும் கூறமுடியாது. அதனால்தான் அரசாங்கம் முஸ்லீம் அல்லது தமிழ் நீதிபதிகள் பதவி வகிக்கும் நீதிமன்றங்கள் வரும்வரை காத்திருந்திருக்கலாம். இங்குதான் பேரினவாதம், அரச இயந்திரம் வரை பரந்து இருக்கின்றது என்பதை அடையாளம் காண வேண்டும். சிங்கள அதிகாரிகள் பேரினவாதத்திற்கு எதிராக செயற்பட தயாரில்லை என்பதை அடையாளம் காணவேண்டும்.

பவனி தடுக்கப்பட்டதைக் கண்டித்து மட்டக்களப்பு நகரில் அம்பிட்டிய சுமங்கலரத்னதேரரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அதனால் நகரில் ஒருவித பதட்டம் ஏற்பட்டது. ஆனால் பொலீசார் ஒருவாறு சமாளித்து தேரரை விகாரை வளாகத்திற்கு அழைத்துச்சென்றனர். பிக்குமாரின் நோக்கம் ஆட்சியாளர்களை சங்கடங்களுக்கு உட்படுத்துவதே! அந்த நோக்கம் வெற்றியடைந்துள்ளது என்றே கூறவேண்டும்.

எனினும் இங்கு எழும் முக்கிய கேள்வி ஒரு தமிழர் பிரதேசத்தில் ஆக்கிரமிப்பு போராட்டத்தை நடாத்தவும், நீதிமன்றத்தின் கட்டளையை பகிரங்கமாகக் கிழித்தெறியவும் ஞானதேரருக்கு துணிவு எங்கிருந்து வந்தது என்பதே! இங்குதான் சிங்கள பௌத்த தேசிய வாதத்தின் பலம்பற்றிய தெளிவு தேவை. சிங்கள பௌத்த தேசிய வாதமும், அதனை ஆதரிக்கும் சிங்கள மக்களும், ஒற்றையாட்சிக்கட்டமைப்பும், அதற்கான அரசியலமைப்பும், அரசியல் யாப்பினை நடைமுறைப்படுத்தும் அரச இயந்திரமும் தான் அந்தத் துணிவைக் கொடுத்தன.

இந்தப் பின்புலம் இல்லாவிடின் ஞானசாரதேரரும், சமங்கலரத்ன தேரரும் பதட்டத்தை உருவாக்கியமைக்காகவும், நீதிமன்றத்தடையை அவமதித்ததற்காகவும் சிறைக்குள் தள்ளப்பட்டிருப்பர். ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி கண்ணீர்ப்புகையும் அடிக்கப்பட்டிருக்கும் குண்டாந்தடி அடியும் கிடைத்திருக்கும்.

19 ஆவது யாப்புத் திருத்த்தின் படி ஜனாதிபதிகூட தற்போதுகூட சட்டத்திற்கு விதிவிலக்கானவர் அல்லர். ஆனால் பௌத்த பிக்குகள் விதி விலக்கானவர்கள். அதுவும் எல்லாவற்றிலும் அல்ல. சிங்கள பௌத்த ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் மட்டும்.

மூன்றாவது விடயம் கருணாவின் கைது. புலிகளின் முன்னாள் கிழக்குத் தளபதியும், மகிந்தர் அரசின் பிரதி அமைச்சரும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கைது செய்யப்பட்டள்ளார். பலகுற்றச்சாட்டுகள் அவர்மீது இருக்கத்தக்கதாக அரச வாகனத் துஸ்பிரயோகம் எனும் சிறு குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என ஊடகச்செய்திகள் வந்துள்ளன.

மகிந்தர் ஆட்சிக்காலத்தில் ஹொங்ஹொங்கில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 800 மில்லியன் ரூபா  அதவாது 8 கோடி பெறுமதியான குண்டு துளைக்காத வாகனம் கருணாவிற்கு வழங்கப்பட்டது. இது மோட்டார் திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை. இலக்கத்தகடும் வழங்கப்படவில்லை. இந்த வாகனத்தை மட்டக்களப்பு கிரானில் உள்ள ஒரு கராஜ்ஜில் கருணா மறைத்து வைத்திருந்தார்.

போர்க்காலத்தில் மகிந்தருக்கு கருணா ஒரு பொன் வாத்து.  கிழக்கில் புலிகளின் பலத்தை உடைத்தமை, வடக்கு – கிழக்கு என்ற பிரிவினையை ஏற்படுத்தியமை, புலிகளின் பலம் - பலவீனம் பற்றிய இரகசியங்களை வழங்கியமை என்பவற்றினால் பொன்வாத்தாகக் கருதப்பட்டார். அவருக்குரிய உச்சபாதுகாப்பையும் அரசவசதிகளையும் அரசு வழங்கியது. தேர்தல் மூலம் அவர் வெல்லமாட்டார் என்பதை நன்கறிந்ததினால் தேசியப்பட்டியல்மூலம் பாராளுமன்ற உறுப்பினராக்கி பிரதியமைச்சர் பதவியையும் வழங்கியது. கருணாகுழு மூலம் இரகசியமாக பலர் கொலை செய்யப்பட்டனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜூம் அதில் ஒருவர். கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர், கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் தம்பையா, பத்திரிகையாளர் நடேசன் போன்றோரும் அதற்குள் அடக்கம்.

சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தினால் ரவிராஜ் படுகொலை விசாரணை முன்னிலைக்கு வந்துள்ளது. கருணா குழுவிற்கும் அதில் பங்குள்ளது என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்காக கருணா கைதுசெய்யபட்டால் அவருக்கு கட்டளையிட்ட மேல்நிலையில் உள்ளவர்களையும் விசாரிக்க வேண்டிவரும். பின்னணியில் நின்றபலர் அம்பலமாகுவர்.

அரசைப் பொறுத்தவரை அவையெல்லாம் போர்க்கால நடவடிக்கைகள். அதனைத் துருவி ஆராயவோ, விசாரணைசெய்யவோ, அதன்மீது தண்டனை வழங்கவோ முடியாது. ஆனால் கருணாவை கைது செய்யாமல் விட்டால்  ஜெனிவாவிலும் பல கேள்விக்கு பதில் சொல்லமுடியாது. அதனால் சர்வதேசத்திற்கு கைது முகத்தையும் சிங்கள மக்களுக்கு வாகன மோசடிக்காக கைது செய்யப்பட்டார் என்ற முகத்தையும் காட்ட முற்படுகின்றது.

போர்க்கால செயல்கள் அனைத்தும் சிங்கள பௌத்த தேசிய வாதத்துடன் தொடர்புடையவை. அதன் மீது நடவடிக்கை எடுக்க முனைந்தால் சிங்கள மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்கவேண்டி ஏற்படும். அதற்கு அரசாங்கம் தயாராகவில்லை. கருணா கைது செய்யப்படுவது அரசாங்கத்திற்கு பிரச்சினையில்லை.

ஆனால் அவருக்கு கட்டடையிட்ட தளபதிகள் கைது செய்யப்படக் கூடாது என்பதில் அரசாங்கம் கவனமாக உள்ளது. விசேட அதிரடிப்படைகளின் முன்னாள் கட்டடைத் தளபதி ஓய்வுபெற்ற பிரதிப்பொலிஸ்மா அதிபரும் ஜே.எல்.எம்.சரச்சந்திராவும் வாகன மோசடிக்காக கைது செய்யப்பட்டபோதும் சிங்கள மக்கள் மத்தியில் எதிர்ப்பு வர ஜனாதிபதி தலையிட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

சிங்கள மக்களைப் பொறுத்தவரை போர்த் தளபதிகள் வீரபுருஷர்கள். அவர்கள் குற்றங்கள் செய்தாலும் கைது செய்யப்படக்கூடாது.

சுறாக்கள் எல்லாம் தப்பியோட நெத்தலிகள் மட்டும் பிடிபடுகின்றனர். முன்னர் பிள்ளையான், தற்போது கருணா, எதிர்காலத்தில் தீவுப்பகுதி தாக்குதலுக்காக டக்ளசும் கைதுசெய்யப்படலாம்.

போருக்கு உதவி செய்த தமிழர்கள் கைதுசெய்யப்படுவது அரசிற்கோ பேரினவாதிகளுக்கோ ஒரு பொருட்டல்ல. சிங்களவர் கைதுசெய்யப்படக்கூடாது என்பதே அவர்களின் மனநிலை. போராட்டத்தை காட்டிக்கொடுத்தவர்களுக்கு எவையெல்லாம் எதிர்காலத்தில் கிடைக்குமோ இப்போது கூறமுடியாது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment