தமிழர் திருநாள் வாழ்த்துகள். நேற்று(13-1-2017) நள்ளிரவில் இளந்தமிழகம் இயக்கத்தின் செய்தி அறிக்கையாக வெளியிடப்பட்டது இயக்கத்தின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் முயற்சியாகும். அது அதிகாரப்பூர்வ அறிக்கை அல்ல.
இளந்தமிழகம் இயக்கம் ஈழ விடுதலை, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, பொருளாதார சமத்துவம் மற்றும் தமிழ்த்தேசியம் ஆகிய கோரிக்கைகளுக்காகப் புதிய நடுத்தர வர்க்க தொழிற்பிரிவினரை அணிதிரட்டும் நோக்கத்தைக் கொண்டது என்பது அதன் கொள்கை அறிக்கையில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இளந்தமிழகம் போன்ற குறிப்பிட்டப் பிரிவினரிடையே செயல்படும் இயக்கத்தில் உறுப்பினராய் இருப்பவர்கள் வேறொரு கட்சியில் உறுப்பினராய் இருக்க முடியுமா? என்ற விவாதம் கடந்த ஆறுமாத காலமாக இயக்கத்திற்குள் நடந்து வருகிறது.
மேலும் இயக்கத்தின் உறுப்பினர் வேறொரு கட்சியில் உறுப்பினராய் இருக்கும் பட்சத்தில் பொதுக்குழு, செயற்குழுவுக்கு வர முடியுமா? என்பதே மையக் கேள்வி. அதன் அரசியல் பின்புலத்தில் முழுமையான சமூக மாற்றத்தின் மீதான அறிவியல்பூர்வ நம்பிக்கை தொடர்பான கேள்வியும் மறைந்துள்ளது. இந்தப் பின்னணியில் கடுமையான முரண்பாடுகள் நிலவி வருகின்றன.
கட்சி செயல்பாடுகளில் இருப்பதற்கு இருக்கும் உரிமை தொடர்பாக எதிர்கருத்து கொண்டோர் தன்னிச்சையாக நவம்பர் 19 அன்று கூடி ‘போட்டிப் பொதுக் குழுவை’ நடத்தினர். மேலும் அவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இயக்கத்தின் வலைதளம், அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரி, தொழிற்சங்கத்தின் வலைதளம், முகநூல் பக்கம் ஆகியவற்றின் credentials களை மாற்றி கையப்படுத்தி வைத்துள்ளனர். இருப்பினும் இரட்டை உறுப்பினர் நிலை பற்றிய திறந்த மனதுடனான விவாதத்தை நடத்தும் நோக்கில் சனவரி 8 அன்று பொதுக்குழுவைக் கூட்ட அழைப்பு விடுத்தேன். அதை தொடர்ந்து அந்தக் கூட்டத்தில் முன்னிலை வகிக்க திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, பேராசிரியர் மணிவண்ணன் மற்றும் தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் அமைப்பாளர் தோழர் தியாகு ஆகிய மூவருக்கும் ’போட்டிப் பொதுக்குழு நடத்தியவர்கள்’ அழைப்புக் கொடுத்தார்கள்.
அதை தொடர்ந்து நானும் தலைவர்களைச் சந்தித்து அழைப்புவிடுத்தேன். இளந்தமிழகம் இயக்கத்தின் ஒற்றுமையின் மீது அக்கறை கொண்டு அவர்கள் எமது அழைப்பை ஏற்றுக் கொண்டனர். அதன்படி திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராஜேந்திரன், பேராசிரியர் மணிவண்ணன் மற்றும் தோழர் தியாகு ஆகிய மூவரும் சனவரி 8 அன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்குபெற்றனர். ஆனால், ’போட்டிப் பொதுக்குழு நடத்தியவர்கள்’ கடைசி நாளன்று பொதுக்குழுவுக்கு வர மறுத்துவிட்டனர். பொதுக்குழு கூட்டத்தின் முடிவில் ஒற்றுமை நோக்கிய தீர்வுத் திட்டம் ஒன்று முன் வைக்கப்பட்டது. மேலும் சிக்கலைத் தீர்ப்பதற்கென்று மேற்படி தலைவர்களைக் கொண்டு ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்து அவர்களுடன் இணைந்து இரண்டு தரப்பும் பேசுவது என்று முடிவு செய்யப்பட்டது. அந்த கூட்டக் குறிப்புகள் சனவரி 11 அன்று மாலை பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பகிரப்பட்டது.
ஆனால், கெடுவாய்ப்பாக ’போட்டிப் பொதுக்குழு நடத்தியவர்கள்’ தன்னிச்சையாக ‘ஒருங்கிணைப்புக் குழு’ என்ற ஒன்றை அறிவித்து நேற்று நள்ளிரவில் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஏற்கெனவே இயக்கத்தின் இணையத்தைக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டிருந்த காரணத்தால் இந்த குறுப்புத்தனமான செயலில் ஈடுபடுவது அவர்களுக்கு இலகுவாகப் போய்விட்டது. இது வருந்தத்தக்கதாகும். ஆயினும் சனவரி 8 பொதுக்குழு கூட்ட முடிவுகளின்படி ஆலோசனைக் குழு முன்பு அமர்ந்து அவர்களுடன் பேசுவதற்கு நாம் தயாராக இருக்கிறோம். பிரிவுதான் அவர்கள் தெரிவு என்றால்கூட நியாயத்தின் பாற்பட்டு அதை சுமூகமான வகையில் அமைத்துக் கொள்வதுதான் மக்கள் முகாமுக்கு வலுசேர்க்கும் என்பதை வலியுறுத்துகிறேன். பொறுமையும் ஒற்றுமையை விரும்புவதும் பலவீனம் என்று அவர்கள் கருதுவது கெடுவாய்ப்பானதாகும். சனவரி 11 அன்று கூட்டக் குறிப்புகளை அனுப்பும் பொழுது அவர்களுக்கு நான் எழுதிய செய்தியை மீண்டுமொருமுறை இதில் பகிர்கிறேன். இப்போதாவது செவி கொடுப்பாராக!
“சற்று பொறுமையாக நிலைமையைக் கையாளுங்கள். கடந்த காலத்தில் நாம் இணைந்து நின்று மக்கள் பிரச்சனைகளில் வினையாற்றியுள்ளோம். அது சில விளைவுகளை இந்நாட்டில் ஏற்படுத்தியுள்ளது. அதில் இருந்து இந்த சிக்கலைப் பரிசீலியுங்கள். ஆளும் வர்க்கத்தின் மோசமான தாக்குதல்கள் மக்கள் மீது நடந்துவரும் காலப்பகுதியில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். தோழர்கள் தியாகு, ஜவஹர், வ.கீதா என்று நிரம்ப அனுபவமிக்கவர்கள் இதில் கருத்துக் கூறியுள்ளனர். ஒன்றை உருவாக்குவது மிகவும் கடினமானது. ஆனால் உருவாக்கியதைப் போட்டு உடைப்பது மிகவும் எளிதானது. நாம் உருவாக்குவதற்காக இணைந்தவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நமது மன உலகத்திற்கு வெளியே இயங்கிக் கொண்டிருக்கும் புற உலகில் உள்ள மக்கள் முகாமைக் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.”
தோழமையுடன்,
செந்தில்,
ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழகம் இயக்கம்.
9941931499
0 comments:
Post a Comment