மறைந்த பிரபல ஊடகவியலாளர் பற்றிக் அல்பேட் அஸ்வின் சுதர்சனின் ஓராண்டு நினைவு நிகழ்வும் அவரது நினைவுகளைத் தாங்கிய 'கோடுகளால் பேசியவன்' என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வும் இன்று ஞாயிற்றுக்கிழமை(24) பிற்பகல் யாழ். நாச்சிமார் கோவிலடியில் அமைந்துள்ள ராஜா குளிர்களியகத்தின் ஹம்சியா மகால் மண்டபத்தில் இடம்பெற்றது.
கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதி முதல்வர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் "நினைவுகளில் என்றும் பசுமையாக நிறைந்திருப்பவன் அஸ்வின்" என்ற பொருளில் அருட்பணி பிலிப் றஞ்சனகுமார் அடிகளும், "ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சனின் பன்முக ஆளுமைகள்" என்ற பொருளில் சமூக சேவைகள் உத்தியோகத்தரும், எழுத்தாளருமான வே.தபேந்திரனும், "மாதகல் மண்ணின் மைந்தனாக அஸ்வின் சுதர்சன்" என்ற பொருளில் புனித ஹென்றியரசர் கல்லூரி ஆசிரியர் ஜே.அன்ரனிதாசும், "ஓவியராக, காட்டுனிஸ்ராக அஸ்வின் சுதர்சன்" என்ற பொருளில் தினக்குரல் பத்திரிகை உதவியாசிரியர் ஆ.சபேஸ்வரனும், "நண்பர்கள் பார்வையில் அஸ்வின்" என்ற பொருளில் புகையிரத நிலைய உத்தியோகத்தர் வி.கவிச்செல்வனும் "செய்தி ஆசிரியராக, பத்தி எழுத்தாளராக அஸ்வின் சுதர்சன்" என்ற பொருளில் யாழ். மத்திய கல்லூரி ஆசிரியர் எஸ்.ரி.குமரனும், "ஆளுமையுள்ள பத்திரிகையாளன்" என்ற பொருளில் வீரகேசரி பத்திரிகையின் யாழ். பிராந்திய முன்னாள் முகாமையாளர் செ.சௌந்தரராசனும் கருத்துரைகள் நிகழ்த்தினர்.
அஸ்வினின் ஆளுமைத் திறத்தை வெளிக்கொணரும் வகையில் விவரணப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டது. குறித்த திரைப்படத்தை அஸ்வினின் சகோதரர் முன்னாள் ஊடகவியலாளர் எஸ். சுகிர்தன் தயாரித்திருந்தார்.
அஸ்வினின் நினைவுகளைச் சுமந்த கோடுகளால் பேசியவன் என்ற நூலை எழுத்தாளர் வே.தபேந்திரன் வெளியிட்டு வைக்க அஸ்வினின் தாய், தந்தை, சகோதரர் ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர். நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நூலின் பிரதி இலவசமாக வழங்க்கப்பட்டது.
அஸ்வினின் குடும்பத்தினர் சார்பில் பற்றிக் அல்பேட் சுவர்ணா நன்றியுரை ஆற்றினார்.
குறித்த நிகழ்வில் மூத்த, இளம் ஊடகவியலாளர்கள், ஊடக ஆர்வலர்கள், ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment