கண்டியில் வன்முறைகள் உருவானதன் பின்னணியில் பொதுபலசேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரரும், மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரும் காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இருவரும், நேற்றுமுன்தினம்(04) தெல்தெனியவுக்குச் சென்றதையடுத்தே அங்கு அமைதியற்ற நிலை தோன்றியதாக முஸ்லீம் காங்கிரசின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
வன்முறைகள் நடைபெற்ற பகுதிகளான திகண,தெல்தெனிய உள்ளிட்ட கண்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெளத்த பிக்குகள் பலரையும் காண முடிந்தது.
அத்துடன் முஸ்லீம் இளைஞர்களின் தாக்குதலினால் காயமடைந்து உயிரிழந்த சிங்கள சாரதியின் வீட்டுக்கு நேற்றுமுன்தினம் இரவு பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் சென்றிருந்தார். இதன் பின்னரே திகணவில் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் தீவிரமடைந்தன.
இதேவேளை, வன்முறையில் ஈடுபட்ட குழுவினரை பௌத்த பிக்குகள் சிலர் வழிநடத்துகின்ற காட்சிகளும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
வன்முறைகள் இடம்பெற்ற பகுதிகளில் காவியுடையுடன் பௌத்த பிக்குகள் காணப்படும் நிலையில் இந்தச் சம்பவங்களை பௌத்த பிக்குகள் சிலரே தூண்டிவிட்டுள்ளதாகவும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
0 comments:
Post a Comment